விழிநீர் அரிதோ? எளிது' என்று ஈற்றடியிற் கூறிய பொதுப் பொருள் சமர்த்தித்து நின்றது - வேற்றுப்பொருள்வைப்பணியாம். மாமன் இருந்தான், ஐவரும் வந்திருந்தார் - இயல்பினால் நிகழ்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி. (385) 233.- அதுகேட்டுத் திரௌபதிமுறையிடுதல். பொல்லா வசையே புகழ் பூணாப்புல்லன் புகல விதற்கொன்றுஞ், சொல்லா திருந்த பேரவையைத் தொழுதா ளழுதாள் சோர்வுற்றாள், மல்லார் திண்டோண் மாமா வோ மந்தா கினியாண் மதலாயோ, எல்லா நெறியு முணர்ந்தவருக் கிதுவோ மண்ணிலியல்பென்றாள். |
(இ -ள்.) பொல்லா வசையே புகழ் பூண் ஆ - பொல்லாத (மிகக்கொடிய) பழிப்பையே (தனக்குப்) புகழும் ஆபரணமுமாகக் கொண்டு, புல்லன் - அற்பனான துச்சாதனன், புகல - (இவ்வாறு கடுமையாகச்) சொல்ல,- இதற்கு ஒன்றும் சொல்லாது இருந்த பேர் அவையை - இந்த [துச்சாதனனது] வசை மொழியைக் குறித்து ஒன்றும் பேசாதிருந்த பெருஞ்சபையோரை நோக்கி, (திரௌபதி), அழுதாள் - புலம்பி, சோர்வுற்றாள் - ஏக்கமுற்றவளாய் நின்று, தொழுதாள் - கைகூப்பி வணங்கிக்கொண்டு,- 'மல் ஆர் திண் தோள் மாமாவோ - மற்போர்க்கு இயைந்த வலிய தோள்களையுடைய மாமனே! மந்தாகினியாள் மதலாயோ - கங்கா தேவியின் புத்திரனே! எல்லாம் நெறியும் உணர்ந்தவருக்கு - நீதி நெறிகளெல்லாவற்றையுங் கற்றுத் தேர்ந்தவர்களாகிய உங்கட்கு, இது-, மண்ணில் - இந் நிலவுலகத்தில், இயல்புஓ-இயற்கையான நற்குணமாகுமோ?' என்றாள் - என்று கூறினாள்; (எ - று.) 'இது' என்றது, தருமபுத்திரன் தன்னைத்தோற்ற பின்பு பந்தயமாக வைத்ததனால் முறைமையாகச் சயிக்கப்படாத என்னைத் தீண்டக்கூடாத காலத்திற் பலர்கூடிய சபையிலே துச்சாதனன் வசைமொழிகூறி இழுத்துக்கொண்டு வருகையிலும் ஒன்றும் பேசாது மௌனமாயிருத்தலைக் குறிக்கும். கல்வி ஒழுக்கம் முதலிய புகழ்க்குக் காரணமான மேன்மைகளைச் சிறிதும் பெறாது இழிகுணத்தையே பாராட்டி மிகக்கொண்டானாதலால், 'பொல்லாவசையே புகழ் பூணா' என்றார்; "இசையினும் பெருக நன்றெனத் தனதியற்கையால் மிகவளர்த்திடும், வசை" என்பது, ஒப்புநோக்கத்தக்கது. வசையே, ஏகாரம் - பிரிநிலையோடு தேற்றம். இனி, புகழ்பூணா புல்லன் - கீர்த்தியை மேற்கொள்ளாத அற்பனாகிய துச்சாதனன், பொல்லாவசையே புகல - பொல்லாத நிந்தை மொழிகளையே எடுத்துக்கூற என்றும் பதவுரை கூறலாம். தொழுதாள், அழுதாள்,' சோர்வுற்றாள் - முற்றெச்சங்கள். திருமாலின் திருவடித் தீர்த்தமானது வானத்திற் பாய்கையில் மந்தாகினி என்றும், பூமியிற்பாய்கையில் கங்கை யென்றும், பாதலத்திற் பாய்கையில் போகவதி யென்றும் பெயர் பெறும். மாமாவோ - விளியுருபாக ஈறுகெட்டு அயல்நீண்டு, புலம்பலில் ஓகாரம் மிக்குவந்தது," "புலம்பின் ஓவுமாகும்" என்பது நன்னூல். மதலாயோ-மதலையென் |