பதன் விளி: ஈற்று ஐகாரம் 'ஆ'ய் எனத்திரிந்து. புலம்பலில் ஓகாரம் பெற்றுவந்தது. 'மந்தாகினியாண் மதலாயோ' என்றது வீடுமனை. உணர்ந்தவருக்கு-முன்னிலைப் படர்க்கை. (386) 234.- வீடுமன் கூறுதல். இன்னற் படுஞ்சொற் பாஞ்சாலியிரக்கந் தனைக்கண் டிரக்கமுறா, மன்னற் கிளையோய் தவறுரைத்தல் வழக்கோ வடமீ னனையாளை, என்னக் கழறி நீயுரைத்த வெல்லா மரசற் கியம்பெற்றான், முன்னர்ப்புகலுங் குருகுலத்தோர் முதலாம் வாய்மை மொழியோனே. |
(இ - ள்.) முன்னர் புகலும் குருகுலத்தோர்-சிறப்பாகப் பேசப்படுகிற குருகுலத்தோருள், முதல் ஆம் - பெரியவனும், வாய்மை மொழியோன் - சத்தியமான பேச்சையுடையவனுமாகிய வீடுமன், இன்னல்படும் சொல் பாஞ்சாலி இரக்கந்தனை கண்டு - துன்பத்தைத் தெரிவிக்கின்ற சொற்களையுடைய திரௌபதியினது புலம்புதலைக் கண்டு, இரக்கம் உறா - இரக்கங்கொண்டு,- (துச்சாதனனை நோக்கி), மன்னற்கு இளையோய் - துரியோதனராசனுக்குத் தம்பியே! வடமீன் அனையாளை - அருந்ததியை யொத்த பதிவிரதையாகிய திரௌபதியைக் குறித்து, தவறு உரைத்தல் - ('பொது மகள்' என்று) இழிவாகச் சொல்வது, வழக்கோ-நீதி முறைமையாகுமோ, என்ன கழறி - என்று சொல்லி,- (திரௌபதியை நோக்கி), 'நீ உரைத்த எல்லாம் - நீ முன்னே கூறிய செய்திகளையெல்லாம், அரசற்கு இயம்பு - (இப்பொழுது) திருதராஷ்டிர மகாராஜன் முன்னிலையிற் சொல்வாய்,' என்றான்-; (எ - று.) இதனால் வீடுமன் துச்சாதனனது தீச்செய்கையைத் தவிரக் கூறி, திரௌபதிக்குத் தேறுதலாகுமாறு அரசனிடத்துக் குறை தெரிவித்துக் கொள்ளச் சொல்லினனென்க. திருதராட்டிரன் அரசனாய்ப் பெரியோனாதலால், அவனிடத்திற்கூறுமாறு வீடுமன் திரௌபதிக்குச் சொல்லின னென்க. பீஷ்மன் 'உரைத்தவெல்லாம்' என்று குறித்தது, கீழ் 211-ஆஞ் செய்யுளில் திரௌபதி வார்த்தையாகப் பிராதிகாமி கூறியவற்றை. பாஞ்சாலி - பாஞ்சால தேசத்தரசனான துருபதனது மகள். இரக்கமுறா என்றான் என இயையும்; இனி, இரக்கமுறா மன்னற் கிளையோய் என இயைத்து, சற்றும் மனமிரங்காத துச்சாதனனே! என்றும் பொருள் கூறலாம். உரைத்த - பலவின்பாற் பெயர். வீடுமன் வயோவ்ருத்தனும் சீலவ்ருத்தனுமாவனென்பது, ஈற்றடியினால் விளக்கப்பட்டது. 'தருமபுத்திரனே திரௌபதியின் ஆட்சேபத்திற்குச் சமாதானஞ் சொல்லத்தக்கவன்' என்று வீடுமன் கூறியதாக வியாசபாரதத்திற்கு ஏற்ப, 'மன்னற்கு இயம்பு' என்பதற்கு - யுதிஷ்டிரராஜனிடத்திற் சொல் எனப் பொருள்கூறுதல் சிறக்கும். (387) |