235.-திரௌபதி சபையோரைநோக்கி நீதி கூறுமாறு வேண்டுதல். மன்றோற் றனன்வெஞ் சூதாகில்வழக்காற் கொண்மின் மன்னவையின், முன்றோற் றனனோ வென்னையுந்தான் முன்னேயிசைந்து தனைத்தோற்ற, பின்றோற் றனனோ கரியாகப் பெரியோருண்மை பேசுகென, மின்றோற் றனைய நுண்ணிடையாள் விழிநீர்வெள்ளமிசை வீழ்ந்தாள். |
(இ -ள்.) மின் தோற்று அனைய நுண் இடையாள் - மின்னலும் தோற்றுவிட்டாற் போன்றிருக்கிற [மின்னலினுஞ் சிறந்த] நுண்ணிய இடையையுடையவளான திரௌபதி,-'மன்வெம் சூது வழக்கால் தோற்றனன் ஆகில் - தருமராசன் கொடிய சூதாட்டத்தில் (என்னை) முறைமைப்படியே (பந்தயம் வைத்துத்) தோல்வியடைந்திருந்தால், கொண்மின்-(உமது விருப்பத்தின்படியே என்னையும் அடிமை) கொள்ளுங்கள்; மன் அவையில் - ராஜசபையிலே, தான் - அந்தத் தருமபுத்திரன், என்னையும் முன் தோற்றனனோ - (மற்றைப் பொருள்களோடு) என்னையும் (தன்னைத் தோற்பதற்கு) முன்னமே தோற்று விட்டானோ? (அன்றி), முன்னே தனைஇசைந்து தோற்றபின்-முதலில் தன்னைப் பந்தயமாகக் குறிப்பிட்டுத் தோற்றபின்பு, தோற்றனனோ-(என்னைத்) தோற்றுவிட்டானோ? பெரியோர் கரியாக உண்மைபேசுக-(இங்கு உள்ள) பெரியோர்கள் (இவ்விஷயத்தில்) சாட்சியாக உண்மை சொல்லுக,' என - என்றுகூறி, விழிநீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் -(தனது) கண்ணீர்ப் பெருக்கின்மேல் விழுந்து வருந்தினாள்; (எ -று.) கீழ்ப் பிராதிகாமி திரௌபதியின் பேச்சாகக் கற்பித்துக் கூறியது சரியாகுமாறு திரௌபதியும், சபையோரை நோக்கி, 'பெரியோர்களே! தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பின்பு என்னைத் தோற்றானோ? என்னைத் தோற்றபின்பு தன்னைத்தோற்றானோ? இவ்விஷயத்தைப்பற்றி நீங்கள் உண்மை கூறுங்கள்; தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னமே என்னைத் தோற்றிருப்பின் என்னை அடிமையாகக்கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை; தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பிறகு ஐவர்க்கும் பொதுவாகிய என்னைத் தோற்றிருப்பின், அடிமையாகிய தான் என்னைப் பந்தயம் வைத்து இழப்பதற்கு உரிமையில்லான்; அப்போது என்னை அடிமையாக்கச் சிறிதும் முறைமையில்லை' எனத் தன் கருத்தை வெளியிட்டன ளென்க. முன்பு தன்னைத் தோற்றுப் பிறர்க்கு அடிமையாய் விட்டவனுக்கு மண் பெண் பொன் முதலியவற்றின் உரிமையில்லை யென்னுங் கோட்பாட்டினால் இங்ஙனங்கூறின ளென்க. 'கொண்மின்' என்றது, துரியோதனாதியரை நோக்கியது. 'மன்வெம் சூது தோற்றனன் ஆகில் வழக்கால், கொண்மின்' என்பதற்கு-தருமராசன் கொடிய சூதாட்டத்தில் தோல்வியடைந்திருந்தால் (அவனது பொருள்களை) நியாயப்படி (நீங்கள்) கைக்கொள்ளுங்கள் என்று பொதுப்படவுரைத்த தாகப்பொருள் கூறலுமாம். தோற்று-எச்சத்திரிபாக, தோற்றாலெனப் பொருள் தந்தது; இனி, தோற்ற |