தனைய என்பதன் தொகுத்தலெனவும், 'தோன்று' என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயராக்கொண்டு மின்னல் தோன்றுதலையொத்துத் தோன்றுகின்ற எனவும் பொருள் கொள்ளலாம். (388) 236.- சபையோர்மௌனமாயிருந்தமைக்குக் கவி இரங்கிக் கூறுதல். மையோ டரிக்கண் மழைபொழியவாடுங் கொடியின்மொழிக்காகார், வெய்யோ னெண்ணந் தனக்காகார் விறல்வேல்வேந்தர் வெரூஉக் கொண்டு, பொய்யோ வன்று மெய்யாகப்புனையோ வியம்போ லிருந்தாரை, ஐயோ வந்தக் கொடுமையையாமுரைக்கும் பொழுதைக் கதிபாவம். |
(இ -ள்.) விறல் வேல் வேந்தர் - (அந்தச்சபையிலுள்ள) பராக்கிரமமுள்ளாரான வேலாயுதத்தையேந்திய அரசர்கள்,-வெரூஉக் கொண்டு- (துரியோதனனிடத்து) அச்சங்கொண்டிருப்பதனால், மையோடு அரிகண் மழை பொழிய-மையையும் செவ்வரியையுமுடைய கண்களிலிருந்து மழைபோல நீர்பெருக, வாடும் கொடியின்-வாடுகின்றவளாகிய பூங்கொடி போன்ற திரௌபதியினது, மொழிக்கு-வினாமொழிக்கு, ஆகார்-(சரியானபடி) விடைகூறத்திறமற்றவர்களாயும்,-(நடந்த உண்மை வேறுவகையாக யிருப்பதனால்), வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்-கொடியோனாகிய துரியோதனனது எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவர்களாயும்,-பொய்யோ அன்று மெய் ஆக புனை ஓவியம் போல் இருந்தார்-பொய்யேயன்று உண்மையாகவே அழகாக எழுதிய சித்திரப்பாவைபோல(ச் சிறிது அசைதலுமின்றி) இருந்தார்கள்; ஐயோ-! அந்த கொடுமையை-அந்தக் கொடுமையைக் குறித்து, யாம்-, உரைக்கும் பொழுதைக்கு- எடுத்துச்சொன்னாலும் அப்பொழுது, அதிபாவம்-(நமக்குப்) பெரும்பாவம் உண்டாகும்; (எ - று.) கொடும்பாவியாதலால், துரியோதனனை 'வெய்யோன்' என்றே கூறினார். சபையிலிருந்த அரசர்களெல்லாரும் துரியோதனனிடத்து அச்சத்தால் முறைப்படி திரௌபதிக்குச் சார்பாகப் பேசுவதற்கு அஞ்சியும், மனச்சாட்சிக்கு மாறாயிருத்தலால் துரியோதனனுக்குச் சார்பாகப் பேசுவதற்குப் பின்வாங்கியும், ஒருவழியிலுந் துணியாமல், எழுது சித்திரம்போலத் திகைப்புற்றிருந்தார்க ளென்க. ஒரு பெண் துணையின்றித் தனியே நின்று பலர்கூடிய ராஜசபையில் நீதிகூறுமாறு குறையிரந்துவேண்டி அழுது புலம்புகையிலும், துரியோதனனுக்கு அஞ்சி நடுவுநிலைமைகுன்றி நீதியெடுத்துக் கூறாது மௌனமாயிருந்தது பெரும்பாதகமென்பதை, ஈற்றடியினால் விளக்கினார். ஒருவனது பாபச்செயலைப் பிறன் எடுத்துரைத்தால், அவ்வாறு உரைப்போனையும் அப்பாவத்திற் பாதிபங்கு சேருமென்பது, அறநூற் கொள்கை. 'விறல் வேல்வேந்தர்' என்றது - தாங்கள் ஆயுதங்களையேந்திய வீரராயிருந்தும் துரியோதனனுக்கு அஞ்சித் தக்க சமயத்தில் நியாயமெடுத்துக் கூறாமல் வாளாவிருந்தமைபற்றிய இகழ்ச்சிக் குறிப்பு. |