| பொய்யோ, ஓகாரம் - தெரிநிலை. இருந்தாரை, பொழுதைக்கு என்பவற்றில், ஐகாரம்-சாரியை. பொழுதைக்கு=பொழுதில்; உருபுமயக்கம். இனி, இருந்தாரை அந்தக் கொடுமையை உரைக்கும் பொழுதில் என இரண்டு செயப்படுபொருள் வந்த செய்வினையாகக் கொள்ளினும் இழுக்காது; இவ்வாறு கூறும்பொழுது, விறல் வேந்தராகிய இருந்தாரை என்க: இருந்தவரது கொடுமையையென்பது கருத்து. இருந்தார் ஐயையோ! என்று எடுத்து உரைப்பினுமாம். மை ஓடு அரி கண் என்று எடுத்து - மையையும் படர்ந்த செவ்வரியையுமுடைய கண்களென்று பதவுரை கூறினுமாம். (389) 237.-இதுமுதல் மூன்று கவிகள் -விகர்ணன் சபையோரை நோக்கிக் கூறுவன. அல்லார் கூந்தல் விரித்தமயிலனையா ளரற்ற வதற்கொன்றுஞ், சொல்லா தூமர் கணம்போலத் தொல்போர் வேந்தர் சூழ்ந்திருப்ப, மல்லார் தடந்தோள் விகருணனாம் வாய்மைக் கடவுள் வாள்வேந்தீர், பொல்லா நெறியி லனைவீரும் போகா வண்ணம் புகலீரோ. |
இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ -ள்.) அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் - இருளை யொத்த (கருநிறமான) கூந்தலை விரித்துக் கொண்டுள்ளவளும் மயில்போன்ற சாயலையுடையவளுமான திரௌபதி, அரற்ற-இவ்வாறு முறையிட்டுக் கதறிப் புலம்பலும், அதற்கு ஒன்றும் சொல்லாது - அத்திரௌபதியின் வினாவுக்கு (த்தக்க தென்றாவது தகாத தென்றாவது) ஒன்றும் மறுமொழி கூறாமல், ஊமர்கணம்போல - ஊமைகளின் கூட்டம்போல, தொல்போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப - பழமையான குலத்தில் தோன்றிய போர் செய்தற்கு உரிய அரசர்கள் சூழ்ந்திருக்க,-மல் ஆர் தட தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் - மற்போர் செய்தற்கு உரிய பெரிய தோள்களையுடையவனும் சத்தியத்தையே பேசுந் தெய்வத்தன்மையுடையவனுமான விகர்ணனென்பவன்,- (அச்சபையோரை நோக்கி), 'வாள் வேந்தீர் - வாட்படையையுடைய அரசர்களே! அனைவீரும்-நீங்களெல்லீரும், பொல்லா நெறியில் போகாவண்ணம் - பொல்லாத (மிகத்தீயதாகிய) நரகநெறியிற் செல்லாதிருத்தற் பொருட்டு, புகலீர் - நீதியையே கூறுங்கள்; (எ - று.) நீதியை யெடுத்துக் கூறாதொழிவீராயின் உங்கட்கு நரகம் நேர்வது திண்ணமென்று கூறியவாறாம். இராவணன் தம்பியருள் விபீஷணன்போல, துரியோதனன் தம்பிமாருள் விகர்ணன் நீதிகளை நன்கு உணர்ந்து நடுவுநிலையோடு நியாயவழியைப் பேசுகின்ற நற்குணமுடையவன். இவனது சத்தியகுணத்தை நன்குமதித்து 'விகருணனாம் வாய்மைக் கடவுள்'என்றார். விகருணன் 'வாள் வேந்தீர்' என்று அரசரைச் சிறப்பித்து விளித்தது, 'நீங்கள் துரியோதனனுக்கு அஞ்சி நடுவுநிலைமைகுன்றி மௌனமாயிராதீர்கள்' என்று குறிப்பித்தவாறாம். இச்செய்யுளிலுள்ள 'வாய்மைக் கடவுள்' என்றது, மேல் 240-ஆங் கவியிலுள்ள 'சொன்னான்' என்பதைப் |