| (இ - ள்.) தன் நேர் இல்லா நெறி தருமன் - தனக்கு ஒப்பாக ஒருவரையும் பெறாதவனும் நல்லொழுக்கத்தை யுடையவனுமான தருமபுத்திரன், தன என்றுஉரைக்க தக்க எலாம்-தன்னுடையனவென்று சொல்லத்தக்க எல்லாப்பொருள்களையும், முன்னே தோற்று-முதலில் தோற்றிழந்து, தங்களையும் முறையே தோற்று-தங்களைவரையும் முறையே பந்தயமாக வைத்துத் தோற்று, முடிவு உற்றான்-(தனது நல்லுணர்வு) ஒழியப் பெற்றான்; தான் பிறர்க்கு தொண்டு ஆய் விட்டு-(தருமன்) தான் (இவ்வாறு எல்லாவற்றையும் தோற்றுப்) பிறர்க்கு அடிமையாய்விட்டு, பின்னே-பிறகு, நேர் சொல் உரைக்கு - எதிரில் நின்று (சகுனி) கூறிய வார்த்தைக்கு (இசைந்து), சுரிகுழலை-நுனிசுருண்ட கூந்தலையுடைய திரௌபதியை, தோற்க-(பந்தயமாக வைத்துத்) தோற்பதற்கு உரிமையினால் பெறுமோ - நீதிப்படி உரிமையைப் பெறுவனோ? என்று - என்பதாக, பேசீரோ - (நீங்கள்) நியாயமெடுத்துக் கூறமாட்டீர்களோ? (எ - று.) இதனால், ஆராய்ந்து முறைமைப்படி பார்த்தால் திரௌபதி வெல்லப்பட்டவளாகா ளென்று சபையிலிருந்த அரசர்க்கு விகர்ணன் தன் கருத்தை எடுத்துக் காட்டியவாறாம். 'தன்னேரில்லா நெறித்தருமன்' என்றது, அறநெறியை நன்குணர்ந்தவனான இத்தருமனுக்கும் திரௌபதியைப் பந்தயம் வைக்கத் தனக்கு உரிமை யில்லையெனும் உணர்ச்சி தீநட்பினால் இல்லாமற் போயிற்றேயென்ற இரக்கத்தைக் குறிப்பிக்கும். 'நேர் சொல் உரை' என்றது 'மைவருந் தடங்கண் வேள்விமாது தன்னையொட்டி நீ, கைவருங் கவற்றினின்னமெறிக' என்று கீழ் 182-ஆஞ் செய்யுளிற் சகுனியின் வார்த்தையாக வந்ததைச் சுட்டும். ஆகவே, திரௌபதியைப் பந்தயம் வைத்தது, சகுனியின் தூண்டுதலினாலன்றிச் சுயபுத்தியினாலன் றென்றதாம். இங்ஙனம் தன்னைத் தோற்றபிறகு தன் மனைவியைப் பந்தயம் வைத்தற்குத் தருமனுக்கு உரிமையில்லையாகவே அத் திரௌபதியைத் துரியோதனன் கைக்கொள்ளவும் முறையில்லை யென்க. இனி, 'முடிவுற்றான்' என்பதற்கு - (எல்லாவற்றையும் தோற்று வேறே பந்தயம் வைத்தற்குப்) பொருளொன்றுமில்லாதவனாயினா னென்றும், சூதாடுதல் முடியப்பெற்றானென்றும், சொல்நேர் உரைக்குத் தான் பிறர்க்குத் தொண்டு ஆய் என்று இயைத்து - (தான்) சொல்லிய சத்தியமான வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான் பிறர்க்குத் தொண்டனாய் என்றும், உரைக்கு என்பதை 'கு' விகுதிபெற்ற தன்மையொருமை யெதிர்கால வினைமுற்றாகக் கொண்டு, சொல் நேர் உரைக்கு - (யான்) நேரான வார்த்தை சொல்வேன் என்றும் உரைப்பாருமுளர். தன - பலவின்பாற்குறிப்பு வினையாலணையும்பெயர். சுரிகுழல் - வினைத்தொகையன்மொழி. தருமன் பெறுமோ என இயையும்; பெறும் - செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது. 'சொன்னேருரைக்கிற் றான்பிறர்க்குத் தொண்டாய் விட்டுஞ் சுரிகுழலைப், பின்னே |