தோற்க வுரிமையினாற் பெறுமோ வொன்றும் பேசீரோ' என்றும் பாடமுண்டு. (392) 240.-நீதியைக் கூறியவிகர்ணனைக் கர்ணன் சினந்து கூறலுறல். என்னா மன்னர் முகநோக்கி யெல்லாரிதயங் களுமகிழச் சொன்னா னெவருந் தக்கோனென்றவனுக் கொருபேர் சூட்டியபின் நன்னா மனத்தோ டழன்மூள நயனஞ்சிவக்க நஞ்சின்வடிவு அன்னா னிளவன் முகநோக்கியருக்கன் குமர னறைகின்றான். |
(இ -ள்.) என்னா-என்று, மன்னர் முகம் நோக்கி - அரசர்களது முகத்தைப் பார்த்து, எல்லார் இதயங்களும் மகிழ-(அச் சபையிலிருந்த) எல்லாருடைய மனமும் மகிழும்படியாக, சொன்னான் - (நீதி) எடுத்துக் கூறினான்; (அப்பொழுது), எவரும் - அதுகேட்ட எல்லோரும், தக்கோன் என்று அவனுக்கு ஒருபேர் சூட்டியபின் - 'யோக்கியன்' என்று அவ்விகர்ணனுக்கு ஒரு சிறப்புப் பெயரைச் சூட்டிய பிறகு,- அருக்கன் குமரன்- சூரிய குமாரனான கர்ணன்,-நல் நா மனத்தோடு அழல் மூள -(தனது) அழகிய நாக்கிலும் மனத்திலும் கோபாக்கினி மிகுதியாக வுண்டாகவும், நயனம் சிவக்க - கண்கள் சிவப் பேறவும்,-நஞ்சின் வடிவு அன்னான் இளவல் முகம் நோக்கி - விஷமே ஒரு வடிவு எடுத்தாற் போன்றவனான [மிகக் கொடிய] துரியோதனனது தம்பியாகிய விகர்ணனது முகத்தைப் பார்த்து, அறைகின்றான் - கூறுபவனானான்; (எ - று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க. 'எல்லார்' என்றதும் 'எவரும்' என்றதும் துஷ்டசதுஷ்டரொழிந்த மற்றவர்களையே குறிக்கும். ராஜராஜனும் தனது தமையனுமான துரியோதனனுக்கே மாறாகப் பிறரெவரும் அஞ்சி எடுத்துக்கூறாத நீதியை நடுவுநிலைமைகுன்றாமற் சிறிதும் பின்வாங்காது அத் துரியோதனனது முன்னிலையிலேயே எடுத்துக்கூறிய பெருந்தகைமைபற்றி, விகர்ணனுக்கு எல்லாரும் ஒரே மனமாய் 'தக்கோன்' என்று ஒரு பெரும்பெயர் சூட்டினரென்க; இதனால், அவ்விகர்ணன் வார்த்தைக்கு அச்சபையோர் யாவரும் உடன்பட்டனரென்பது போதரும். தனது உயிர்நண்பனான துரியோதனனது கருத்துக்கு விகர்ணன் பேச்சு மாறாயிருந்ததனால், கர்ணன் பரிந்துரைப்பானாயினான். மூன்றாமடி-கர்ணனது கோபமிகுதியை விளக்கும். துரியோதனனுக்கு நஞ்சு-மிக்க கொடுமையில் உவமம்; நிறம் பற்றிய உவமையெனக் கொள்ளலுமொன்று. 'சொன்னான்' என்பதற்கு-கீழ் 237-ஆங் கவியில் வந்த 'விகருணனாம் வாய்மைக் கடவுள்' என்றது, எழுவாயாம். முகம், ஹ்ருதயம், மநஸ், நயநம், அர்க்கன், குமாரன்-வடசொற்கள். நாமனம் - உம்மைத்தொகை. மனத்தோடு உருபுமயக்கம். 'நஞ்சின் வடிவன்னான்' என்றதை அருக்கன் குமரனுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. 'சூட்டினர்பின்' என்பதும் பாடம். (393) |