பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 372

                            வேறு

241.-இதுவும்,அடுத்தகவியும்-கர்ணன் விகர்ணனை நோக்கிக்
கூறியன.

இருக்கின்ற தரணிபரி னின்னறிவா லுயர்ந்தனையோ விராச நீதி,
குருக்கொண்டு முதிர்ந்தனையோ நினையொழிந்தால் வழக்கொருவர்
                                       குறிப்பா ரற்றோ,
மருக்கொண்ட தொடைமுடியாய் மொழிகெனநின்னுடன்கேட்க வந்தா
                                       ருண்டோ,
உரைக்கும்போ தெவருடனு முணர்ந்தன்றோ வுரைப்பதென
                                      வுருத்தான் மன்னோ.

மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ -ள்.) (கர்ணன் விகர்ணனை நோக்கி), - இருக்கின்ற தரணியரின் -
(இச்சபையில்) இருக்கின்ற அரசர்களெல்லாரைக்காட்டிலும், இன் அறிவால்
உயர்ந்தனையோ - (நீ) நல்லறிவினாற் சிறப்புற்றிருக்கின்றாயோ? இராசநீதி -
அரசநீதியில், குரு கொண்டு முதிர்ந்தனையோ - பெருமை
பெற்றுவிளங்குகின்றாயோ? நினை ஒழிந்தால் - நின்னை விட்டால், வழக்கு
குறிப்பார் ஒருவர் அற்றோ - இந்த நீதியை எடுத்துப் பேசுபவர்
வேறொருவருமில்லை யென்று நினைத்துக் கூறுகின்றாயோ? மரு கொண்ட
தொடைமுடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ -
'நறுமணம் மிக்க மாலையைத் தரித்த முடியையுடைய அரசனே! நீதிமொழியை
யெடுத்துக் கூறுவாயாக' என்று உன்னிடத்திற் கேட்க வந்தார்
யாரேனுமுளரோ? உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது -
ஒன்று கூறத்தொடங்கும்போது பலருடனும் ஆலோசித்தன்றோ
உரைக்கவேண்டுவது?' என - என்று, உருத்தான் - கோபித்துக் கூறினான்;  (எ
- று.) - மன், ஓ - ஈற்றசை.

    எல்லாவரசரினும் அறிவிற்குறைந்த சிறுவனாயும் இராசநீதி
முற்றுமுணராதவனாயுமிருக்கிற நீ, உன்னைத் தனியே ஒருவருங்
கேளாதிருக்கையில் 'நாம் நீதி கூறாவிடின் வேறொருவரும் நீதிகூறுபவரில்லை'
என்று தன்னைத் தானே நன்குமதித்து வேறொருவருடனும் சிறிதுங் கலந்து
ஆலோசியாமல் நீதிகூறத் துணிந்தது ஸாஹஸத் தொழிலாமெனக் கர்ணன்
விகர்ணனைக் கடுமையாக மறுத்துக் கூறினனென்க.  ஓகாரங்கள் -
எதிர்மறைப்பொருளன.  குரு என்ற வடசொல் - இங்கு மிகுதி என்ற
பொருளைத் தரும்: பண்பியின் பெயர் பண்புக்கு வந்த இலக்கணை.  நின்
அறிவால் என்று பிரித்து உரைத்தல், மோனைத்தொடைக்குச் சிறவாது.
'மருக்கொண்ட தொடைமுடியாய்' என்பதை, முதலில் எடுத்துக் கூறலுமாம்.
நின்னுடன் = நின்னிடத்தில்; வேற்றுமை மயக்கம்.  மொழிகென - தொகுத்தல்.
'உரைக்கும்போ தெவ்வுரையு முணர்ந்தன்றோ' என்றும் பாடமுண்டு.

     இதுமுதல் இருபத்தைந்து கவிகள் - பெரும்பாலும் முதல் நான்குசீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகி வந்த கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.                       (394)