பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 373

242.தான்படைத்த பொருளனைத்துந் தம்பியர்க ளுடன் றோற்றுத்
                            தனையும் தோற்றான்,
மீன்படைத்த மதிமுகத்தா ளிவன் படைத்த தனமன்றி
                            வேறே கொல்லோ,
வான்படைத்த நெடும்புரிசை மாநகருந் தனதில்லும் வழங்கு
                            மாயின்,
யான்படைத்த மொழியன்றே யெங்கணுமில் லெனப்பட்டா
                             ளில்லாளன்றோ.

     (இ -ள்.) (பின்னும் கர்ணன் விகர்ணனை நோக்கி.-)-'(தருமபுத்திரன்),
தான் படைத்த பொருள் அனைத்தும் - தான் அடைந்துள்ள
பொருள்களையெல்லாம், தம்பியர்களுடன் தோற்று-தம்பி மார்களோடுந்
தோற்று, தனையும் தோற்றால்-தன்னையுந்தோற்று விட்டா னென்றால், மீன்
படைத்த மதி முகத்தாள் - இரண்டு மீன்கள் பொருந்தியதொரு
சந்திரனைப்போன்ற முகத்தையுடையவளாகிய திரௌபதி, இவன் படைத்த
தனம் அன்றி வேறே கொல்ஓ - இத்தருமன் அடைந்துள்ள பொருள்களிற்
சேர்ந்தவளாவளேயன்றி வேறாகத் தனிப்பட்டவளாவளோ?  (அன்றியும்), வான்
படைத்த நெடும்புரிசை மாநகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் -
ஆகாயத்தை யளாவியுள்ள நீண்ட மதிள்கள் சூழ்ந்த பெரிய
இந்திரப்பிரத்தநகரத்தையும் தனது இல்லையும் கொடுத்து விட்டதாக
(அத்தருமன்) கூறினானாயின், (மனைவியும் அடங்கிவிட்டவளாவளன்றோ?)
எங்கணும் - எல்லா நூல்களிலும், இல்லாள் இல் எனப்பட்டாள் அன்றோ -
மனைவி 'இல்' என்ற பெயரினாற் கூறப்பட்டுள்ளாளல்லளோ? (இது), யான்
படைத்த மொழி அன்றே - யான் புதிதாக உண்டாக்கிக்கூறிய மொழியல்லவே!'
(என்று மறுத்துக் கூறினான்;) (எ - று.)

    'தருமபுத்திரன் தன்னைத்தோற்றபின்பு திரௌபதியைப் பந்தயம்
வைத்தற்கு உரிமையில்லானென்பது யாவர்க்கும் அங்கீகாரமாயினுமாகுக:
தருமன் எப்பொழுது எல்லாப்பொருள்களையும் பந்தயம் வைத்துத் தோற்றே
னென்றானோ, அப்பொழுதே அப்பந்தயப்பொருளில் தருமனது சொத்தாகிய
திரௌபதியும் அடங்குவள்; அன்றியும், எனது நகரத்தையும் இல்லையும்
பந்தயம் வைத்தேனென்று தருமன் கூறியபோதும், நகரமென்ற
மாத்திரத்திலேயே அதற்குட்பட்டுள்ள வீடும் அடங்குமாதலின், தனியே
கூறப்பட்ட 'இல்' என்னும் மொழி அவன் மனைவியாகிய திரௌபதியையே
குறிக்குமென்பதிற் சிறிதுந் தடையில்லையே! 'இல்' என்னுஞ்சொல் மனைவியைக்
குறிக்குமென்பது யான் கட்டிக் கூறியதன்று: இம்மொழி இப்பொருளில் வருவது,
யாவர்க்கும் ஒப்பமுடிந்ததே:  ஆதலின், திரௌபதி வெல்லப்படாதவ ளென்று
நீ கூறியது, சிறிதும் பொருத்தமின்றாம்' எனச் சில போலிநியாயங்களினாற்
கர்ணன் விகர்ணனை மருட்டின னென்க.

     'இல்' என்பது வீட்டையேயன்றி மனைவியையுங் குறிப்பதாதலை,
"இல்லவளுரிமை பன்னி குடும்பினி யில்லே யில்லாள்",
"புகழ்புரிந்தில்லிலோர்க்கு" என்பன முதலியவற்றால் அறிக.  (வடமொழியில்
'க்ருஹம்' என்பது - வீட்டையும் மனைவியையுங் குறித்தல், இங்கே
கருதத்தக்கது.) எதிரெதிராக ஆடும்போது