பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 374

பந்தயமாக இருவரும் மனமொப்பிய பொருள்களே வெல்லப்பட்டனவாகவும்
தோற்கப்பட்டனவாகவும் கொள்ளத்தக்கனவாதலால், அவ்வாறு தருமன் சகுனி
என்ற இருவரில் ஒருவருடைய மனத்தாலும் முன்னர் எண்ணப்படாமலேயிருந்து
தருமனுக்கு உரிமையில்லாத காலத்தில் இருவரும் திரௌபதியைப் பந்தயமாக
மனமொப்பி யிருக்கவும், 'தருமன் தன்னைத் தோற்கு முன்னமே திரௌபதியை
இழந்தவனாவன்' என்று கர்ணன் சாதிப்பது போலிச்சாதனையே யென்பதை
நுண்ணிதின் ஆய்ந்தறிக.  மீன் படைத்த மதிமுகத்தாள் -
இல்பொருளுவமை. உருவத்திலும் பிறழ்ச்சியிலும் கண்ணுக்கு மீனும்,
வட்டவடிவத்திலும் ஒளியிலும் கண்டோரை மகிழ்வித்தலிலும் முகத்திற்குச்
சந்திரனும் உவமை.  நான்கடியிலும் 'படைத்த' என்றசொல் வெவ்வேறு
பொருளில் வந்தது சொற்பின்வருநிலையணி.  தோற்றான் என்று எடுத்தும்
உரைக்கலாம்.  'தம்பியர்களுடனே யத்தருமன் றோற்றான்' என்றும் பாடம்.
                                                       (395)

243.-கர்ணன் சபையோரைநோக்கிக் கூறியது.

மைக்கோதில் கலையுடையன்மதியுடையன் பொறையுடையன்
                                     வரிசை யாகத்,
தக்கோனென் றரசரெல்லா முரைத்தபெய ரிவன்றனக்கே தக்க
                                      தம்மா,
மிக்கோர்மற் றுங்களைப்போல் வேறுண்டோமகிதலத்து வேந்த
                                      ராகித்,
தொக்கோர்யா னுவன்றமொழிக் கெதிர்மொழியுண் டாமாகிற்
                                      சொல்லு வீரே.

     (இ -ள்.) '(இந்த விகர்ணன்),-மை கோது இல் கலை உடையன் -
குற்றமற்ற அசாரமில்லாத (சாரமான) சாஸ்திரங்களையுணர்ந்தவன்;  மதி
உடையன்-சூட்சமமான புத்தியையுடையவன்; பொறை உடையவன்-
பொறுமையை யுடையவன்; அரசர் எல்லாம்-(இச்சபையிலுள்ள)
எல்லாவரசர்களும், வரிசை ஆக-சிறப்பாக, தக்கோன் என்று உரைத்த பெயர் -
'இவன் தகுதியுடையோன்' என்று கூறிய சிறப்புப்பெயர், இவன் தனக்கே
தக்கது-இந்த விகர்ணனுக்கே தகும்! அம்மா - ஆச்சரியம்! மகி தலத்து
வேந்தர் ஆகி தொக்கோர் - இந்நிலவுலகத்தில் அரசர்களாகி
நிறைந்தோர்களில், உங்களை போல் மிக்கோர் வேறு உண்டோ -
உங்களைப்போல பெருமை பெற்றவர் வேறு யாரேனுமுளரோ? (நீங்கள்), யான்
நுவன்ற மொழிக்கு எதிர் மொழி உண்டு ஆம் ஆகில் சொல்லுவீர் - நான்
கூறின வார்த்தைக்கு மாறாக நீதிவார்த்தையுண்டானால் எடுத்துக் கூறுங்கள்,'
(என்று கர்ணன் சபையோரை நோக்கிக் கூறினான்;) (எ - று.)- அம்மா -
வியப்பிடைச்சொல்:  இங்கு தகுதியற்ற விகர்ணனுக்கு 'தக்கோன்' என்ற
பெயரைச் சூட்டிய அரசர்களது அறிவீனத்தை நோக்கி இழித்தற் குறிப்பாக
வந்ததென்க.  மற்று - அசை.

    'கலையுடையன்' முதலியன - பிறகுறிப்பினால், எதிர்மறைப்பொருள்
விளக்கும்.  இனி, 'கலையுடையன், மதியுடையன், பொறை