| யுடையன்; (ஆதலினால்), தக்கோன் என்று அரசரெல்லாம் வரிசையாக உரைத்த பெயர் என்றும் பொருள் கொள்ளலாம். தகுதியற்றவனுக்கு இவ்வாறு 'தக்கோன்' என்று பெரும்பட்டப்பெயரைச் சூட்டிய சபையோர்களை இழித்துக் கூறுவான், 'மிக்கோர், மற்றுங்களைப் போல் வேறுண்டோ? மகிதலத்து வேந்தராகித் தொக்கோர்' என்றான்; இதுவும், எதிர்மறையிலக்கணையின் பாற்படும் பிறகுறிப்பே. தான் கூறியதே தேர்ந்த நீதியென்று, துரபிமானங் கொண்டவனாதலால், இதற்கு மாறுகூறுதல் ஒருவர்க்கும் இயலாதென்ற கருத்துப்பட, 'எதிர்மொழியுண்டாமாகிற் சொல்லுவீர்' என்றான். மை-இல், கோது இல் என இயையும், தொக்கோர் - இயல்பாகிய அண்மை விளியாகவுங் கொள்ளலாம். (396) 244.-பாண்டவர் திரௌபதிஎன்ற இவர்களின் துகிலை உரியுமாறு துரியோதனன் துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல். என்னவெகுண் டிடுகின்ற வெல்லைதனிலெழுவுறழ்தோ ளிராசராசன் றன்னனைய கொடுங்கோபத் தம்பியையின் றும்பிதனைத்தக்கோ னென்ற, மன்னவையி னெதிரேயிம் மானமிலா வைவரையும்வழக்கு வார்த்தை, சொன்னகிளி மொழியினையுந்துகிலுரிதியெனவுருமிற் சொன்னான் மன்னோ. |
(இ -ள்.) என்ன-இவ்வாறு கூறி, வெகுண்டிடுகின்ற எல்லைதனில்- (கர்ணன்) சினங்கொண்ட இச்சமயத்தில்,-எழு உறழ்தோள் இராசராசன்- தூண்களையொத்த தோள்களை யுடைய அரசர்க்கரசனான துரியோதனன்,- தன் அனைய கொடுங்கோபம் தம்பியை-தன்னைப்போலவே கொடுமையான கோபத்தையுடைய தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து,-'இன்று-இப்பொழுது, உம்பிதனை தக்கோன் என்ற மன் அவையின் எதிரே-உனது தம்பியாகிய விகர்ணனை யோக்கியனென்று கூறிய இந்த ராஜசபையின் முன்பாகவே, மானம் இலா இ ஐவரையும் - மானங்கெட்டவர்களான இந்தப் பாண்டவரைவரையும், வழக்கு வார்த்தைசொன்ன கிளிமொழியினையும் - வியவகாரம் பேசின கிளிபோன்ற வார்த்தையுடையவளாகிய திரௌபதியையும், துகில்உரிதி- வஸ்திரங்களை உரித்து விடுவாயாக,' என - என்று உருமின் சொன்னான் - இடியோசைபோல (க் கொடுமையாக)க் கட்டளையிட்டான்; (எ - று.) மன், ஓ - ஈற்றசை. துரியோதனன் பாண்டவர்கட்குச் செய்யவேண்டுமென்று நினைக்கும் பொல்லாங்குகட்கெல்லாம் உடன்பட்டு அவ்வாறே தன்னாலியன்றமட்டுஞ் செய்துதீர்க்க முயல்பவனாதலால், துச்சாதனனை 'தன்னனைய கொடுங்கோபத் தம்பி' என்றார். துரியோதனன் தன் எண்ணத்திற்கு மாறாகக் கூறிய விகர்ணனை 'தம்பி' என்று பொதுவாகக் கூறுதற்கும் விருப்பமில்லாதவனாய் 'உம்பி' என்றா னென்னலாம். அரசர்கள் அநியாயங்கூறினமையால், அவர்கட்கும் ஒரு மானபங்கமுண்டாம்படி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவ்வரசர்களது முன்பாகவே தருமபுத்திரன் முதலியோ |