நால்வரையும்) கோபந் தணியுமாறு சாந்தப்படுத்தினானெனக்கூறலுமொன்று. எரிவாளி - ஆக்கிநேயாஸ்திர மெனினுமாம். தத்தம் - தந்தம் என்பதன் எதுகை நோக்கிய வலித்தல். முகமதி - முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகை. 'இளையோருருப்ப வடக்கினன்' என்பதும் பாடம். (398) 246.-பாண்டவர்கள் தமது உத்தரீயங்களைத் தாமே கொடுக்க, துச்சாதனன் திரௌபதியைத் துகிலுரிய நெருங்குதல். தருகதுகி லெனவெழுந்து தங்களைவன்பொடுதுச்சா தனன் சொலாமுன், வருகவென வரைமார்பின் வாங்காத வுத்தரியம் வாங்கியீந்தார், அருகணுகி மடவரலை யஞ்சாமற் றுகிலுரிவா னடர்ந்தபோதில், இருகைநறு மலர்குவிய வெம்பெருமா னிணையடிக்கேயிதயம் வைத்தாள். |
(இ -ள்.) துச்சாதனன் -, (துரியோதனனது கட்டளைப்படியே), எழுந்து- எழுந்து வந்து, துகில் தருக என தங்களை வன்பொடு சொலாமுன்- 'வஸ்திரத்தைத் தாருங்கள்' என்று தங்களை நோக்கிக் கடுமையாகக் கூறாதமுன்னமே,-(பாண்டவர்கள்), வருகஎன-(அவனை) வாவென்று அழைத்து, வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார்-மலையை யொத்த தமது மார்பிலிருந்த முன்னொரு நாளும் எடுத்திராத உத்தரீயங்களைக் களைந்து கொடுத்தார்கள்; (உடனே துச்சாதனன்),-மடவரலை அருகு அணுகி - திரௌபதியைச் சமீபித்து, அஞ்சாமல் - சிறிதுங்கூச்சங் கொள்ளாமல், துகில் உரிவான் அடர்ந்த போதில்-அவளது ஆடையைக் கவரும்படி நெருங்கிய போதில்,-(அவள்), இரு கை நறுமலர் குவிய - நறுமணமிக்க தாமரைமலர் போன்ற (தனது) இரண்டு கைகளும் குவிந்து அஞ்சலி செய்து நிற்க, எம்பெருமான் இணை அடிக்கே இதயம் வைத்தாள் - எம்பெருமானது இரண்டு திருவடிகளிலே தனது மனத்தைச் செலுத்தித் தியானித்தாள்; (எ - று.) துச்சாதனன் தமது ஆடையைக் கவரவருவதைக் கண்ட பாண்டவர்கள் அவன் வந்து வலியக்களைவதற்கு முன்னமே கௌரவமாகத் தாமே கொடுத்து விடுவது நலமெனக் கருதித் தாமே தமது உத்தரீயங்களைக் களைந்து கொடுத்தன ரென்க. உத்தரீயம் - வடசொல்: மேலாடையென்று பொருள்படும்; (அரையாடை, அந்தரீயம் எனப்படும்.) மார்பிற்கு மலையுவமை-தோற்றத்திலும் பிறராற் சலிப்படையாத வீரத்திலும், பெரும்பரப்பிலுமாம். இனி, வரைமார்பு- உத்தமரேகைகளையுடைய மார்புமாம். "வரையகல் மார்பிடை வரையு மூன்றுள" என்றதுங் காண்க. 'வாங்காத உத்தரியம் வாங்கி' என்ற தொடர், இது வரையில் ஒருநாளுங் களைந்திராத உத்தரீயத்தை இப்பொழுது களையும்படி யாயிற்றே! என்ற இரக்கத்தைக் குறிப்பிக்கும். வாங்காத உத்தரியம் வாங்கி - தொடைமுரண். துச்சாதனன் தனது துகிலையுரியத் தொடங்கியபோது தன்னைப் பாதுகாக்க வேண்டிய கணவர் ஒருவர்க்கு ஐவராயிருந்தும் |