மாற்றார்க்கு அடிமைப்பட்டுப் பரதந்திரராய்த் தன் திறத்தில் துணைபுரிய வலியற்று வாளா கிடப்பதைக் கண்டு திரௌபதி, கூப்பிய கையளாய், ஸ்ரீய:பதியும் அபாரகருணாநிதியும் ஆச்ரிதவத்ஸலனும் அகதிகட்கு அருள்புரிபவனும் ஆபத்பந்துவுமான ஸ்ரீ கிருஷ்ணனது திருவடித்தாமரை களிடத்துத் தன் கருத்தைச் செலுத்தித் துதிப்பவளாயின ளென்பது, பின்னிரண்டடியின் கருத்து. 'இருகை நறுமலர் குவிய' என்பதற்கு- நறுமணமுள்ள தாமரை மலர்போன்ற இரண்டு கைகளும் (ஆடைகுலையாதபடி இறுக்கிப்பிடித்தற் பொருட்டுக்) குவியவென்று உரைத்தலுமொன்று; அடுத்த செய்யுளில் "வேறானதுகில் தகைந்த கை" என வருதல் காண்க. 'இருகை நறுமலர் தகைய' என்று பாடமோதுவாருமுளர். மடவரல்-மடமையினது வருதலையுடையவள்; வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. உரிவான்-வானீற்று எதிர்காலவினையெச்சம். இணையடி - உபயபாதம். அடிக்கு - வேற்றுமைமயக்கம். (399) 247.-திரௌபதி எம்பெருமானையேரக்ஷகனாகக்கொண்டு முறையிடுதல். ஆறாகி யிருதடங்க ணஞ்சனவெம்புனல்சோர வளகஞ் சோர வேறான துகிறகைந்த கைசோரமெய்சோர வேறோர் சொல்லுங் கூறாமற் கோவிந்தா கோவிந்தாவென்றரற்றிக் குளிர்ந்து நாவில் ஊறாத வமிழ்தூற வுடல்புளகித்துள்ளமெலா முருகி னாளே. |
(இ -ள்.) (திரௌபதி),-இரு தட கண் அஞ்சனம் வெம்புனல் ஆறு ஆகி சோர - (தனது) பெரிய இரண்டு கண்களிலிருந்து (கரைந்து விழுகிற) மையுடனே உஷ்ணமான சோகபாஷ்பம் ஆறாய்ப்பெருகவும், அளகம் சோர - கூந்தல் அவிழ்ந்து புரளவும், வேறு ஆன துகில் தகைந்த கை சோர - (துச்சாதனன் வலிய இழுத்ததனால்) அவிழ்ந்து குலைகிற வஸ்திரத்தைப் பிடித்திருந்த கை நெகிழ்ந்திடவும், மெய்சோர - உடம்பு தளர்ச்சியடையவும்,- வேறு ஓர் சொல்லும் கூறாமல்-, கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி- 'கோவிந்தா!' என்று பலதரம் கதறிக்கூறி முறையிட்டு, (அதனால்) குளிர்ந்து- உடம்பு குளிர்ந்து, நாவில் ஊறாத அமிழ்து ஊற - நாக்கில் இதற்குமுன் சுரந்திராத அமிருதரஸம் சுரக்க, உடல் புளகித்து - (தனது) உடம்பில் மயிர் சிலி்ர்க்கப் பெற்று, உள்ளம் எலாம் - மனம் முழுதும், உருகினாள் - கரைந்து உருகினாள்; (எ - று.) கீழ்ச்செய்யுளின் பின்னிரண்டடிகளினால் தொகுத்துச்சுட்டியதை, இக்கவியினால் வகுத்துக் காட்டுகின்றார். துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது திரௌபதியானவள் தனக்கு நேரும் மானபங்கத்தைச் சிந்தித்து மையைக் கரைத்துக்கொண்டு கண்ணீர் ஆறாய்ப்பெருகவும், துச்சாதனன் பிடித்திழுத்து வந்தபோது அவிழ்ந்த கூந்தல் அவ்வாறே விரிந்து புரளவும், அவன் வலிய அவிழ்த்த ஆடையைத் தன்னாலானவரையும் தகைந்து |