உடம்பு மிகவும் நடுங்கி, கண் நீர் சோர - (தமது) கண்களினின்று நீர் பெருக, செம் கை மலர் குவித்து - செந்தாமரைமலர்போன்ற (தமது) கைகளைக் கூப்பி,-இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் - 'இந்தத் திரௌபதியே கற்புநிலைக்கும் குலத்திற்கும் தெய்வம் போல்வாள்,' என்றார் - என்று (அவளை) நன்கு மதித்துக் கூறினார்கள்; அம் கண் அகல் வானோரும் - அழகிய இடத்தையுடைய விசாலமான வானுலகத்திலுள்ளவர்களாகிய தேவர்களும்,-ஆனகமும் - துந்துபிவாத்தியமும், வலம்புரியும் - வலம்புரிச் சங்குகளும், அதிர - ஆரவாரிக்க, தங்கள் பைங்கனக தருவின் மலர் மழை பொழிந்து - தங்களது பசிய பொன்மயமான கற்பக மரங்களின் மலர்களை மழைபோலச் சொரிந்து, கருணையினால் - கருணையோடு, பரிவு கூர்ந்தார் - அன்புமிகுந்தார்கள்; (எ - று.) திரௌபதியைச் சாதாரணமானவனென்று எண்ணியிருந்த வீடுமன் முதலியோர், இப்பொழுது கண்கூடாக நிகழ்ந்த புதுமையைக் கண்டு அவளது மகிமையை யுணர்ந்து, அத்திரௌபதியைத் தெய்வமாகவே கருதிக் கைகுவித்தனர். அவர்கள் மெய்ந்நடுங்கினது, திரௌபதி கேட்ட வினாக்களுக்குத் தாங்கள் தகுதியான விடைகூறாமல் மேளனமாயிருந்த குற்றத்தைப்பற்றிய அநுதாபத்தினா லென்க. தனது கற்புநிலையால் தானே மானங் காத்துக் கொண்டதனால், திரௌபதியை 'கற்பினுக்குத் தெய்வம்' என்றும், துச்சாதனன்செய்த தீச்செயலால் தனது குலத்திற்கு வசைமொழி சிறிதும் நிகழாது புகழை மிகுவித்துநிற்றலால் 'மரபினுக்குந் தெய்வம்' என்றுங் கூறினார்; "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற, சொற்காத்துச் சோர்விலாள் பெண்" என்ற திருக்குறள் இங்குக் கருதத்தக்கது. பதிவிரதாதருமத்தின் சிறப்பைக் கண்ட கொண்டாட்டத்தினால், வானவர்கள் தமது உலகத்து வாத்தியங்களை முழக்கிப் பூமழை பொழிவாராயினர். அங்கண் - அப்பொழுது எனினுமாம். வானோரும் உம்மை - உயர்வுசிறப்போடு இறந்தது தழுவியது. ஆநகம் - தேவதுந்துபி. தேவலோகத்திலுள்ளவை யாவும் பொன்மயமானவை யென்பது நூல் துணிபாதலால், 'கனகதரு' எனப்பட்டது. கநகதரு - வடசொற்றொடர். மலர்மழை-புஷ்பவர்ஷம். (403) 251.- திரௌபதியின்வருத்தத்தை நோக்கி வீமசேனன் ஆயுதமெடுத்தல். அழுதழுது கொடும்புலிவா யகப்பட்டமான்பிணைபோ லரற்றா நின்ற, எழுதரிய மடப்பாவை தங்கண்முகங் களைநோக்கி யிரங்கி வீழ்ந்த, பொழுதுமனம் புகைமூளப் பூந்தடங்க ணனன்மூளப் போரின்மூளப், பழுதுபடா வடலாண்மைப் பவனகும ரன்றடக்கை படைமேல் வைத்தான். |
இ -ள்.) கொடும் புலிவாய் அகப்பட்ட மான்பிணைபோல் - கொடிய புலியினிடத்து அகப்பட்டுக்கொண்ட பெண்மான்போல, (மிக அஞ்சி), அழுது அழுது அரற்றாநின்ற-மிகுதியாகப் புலம்பிக் |