கதறிக்கொண்டிருக்கிற, எழுது அரிய மடம் பாவை - இளமையுடையவளான எழுதுதற்கு அரிய [மிகவும் அழகிய] சித்திரப் பிரதிமை போன்ற திரௌபதி, தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த பொழுது - (பர்த்தாக்களாகிய) தங்களுடைய முகங்களைப் பார்த்துக்கொண்டே வருந்திக் கீழ்விழுந்த சமயத்தில், (அது நோக்கி),- பழுதுபடா அடல் ஆண்மை பவனகுமரன் - (ஒருபொழுதும்) தோல்வி யடையாத பல பராக்கிரமங்களையுடைய வாயுகுமாரனான வீமசேனன், (கோபத்தினால்), மனம் புகை மூள-மனத்திற் புகையெழவும், பூ தட கண் அனல் மூள - தாமரை மலர்போன்ற (தனது) பெரிய கண்களில் தீப்பொறியுண்டாகவும்,- போரில் மூள-யுத்தஞ் செய்யுமாறு, படைமேல் தட கை வைத்தான்-கதாயுதத்தின்மேல் (தனது) பெரிய கைகளை வைத்திட்டான்; (எ - று.) துச்சாதனனுக்குப் புலியும், திரௌபதிக்குப் பிணைமானும் உவமை. தங்கள் முகங்களை நோக்கியது, இச்சமயத்திலாவது நீங்கள் பகைவர்களை யழிக்க முயலவேண்டாவோ? என்ற குறிப்பு. வீமசேனன் திரௌபதியின் பெருவருத்தத்தைக் கண்டு மிக்க சினங்கொண்டு மனம் புகைந்து கண்களில் தீப்பொறி பறக்கப் போர் செய்யக் கருதித் தனது கதாயுதத்திற் கைவைத்தனனென்க. பவநகுமரன்-வடமொழித்தொடர். 'மூள' என்னுஞ் செயவெனெச்சம் மூன்றனுள் - முன்னைய இரண்டும்- உடனிகழ்ச்சிப்பொருளனவாய் நிகழ்காலத்தையும், ஈற்றது-காரியப்பொருளதாய் எதிர்காலத்தையுங் குறிக்கும். 'மூள' என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்தது-சொற்பொருட்பின்வருநிலையணி. (404) 252.-வீமசேனன் மிக்கசினத்தால் துரியோதனாதியரைப் போர்க்கு அழைத்தல். அருளாருந் தருமபதி யாகாதென்றெமைப்பலகா லடக்க யாமும், இருளால்வெம் பரிதிவடி வொளிப்பதுபோ லமர்புரியா திருக்கின் றேமான், மருளான்மெய்ம் மயங்கியொரு வலியுடையோர்தமைப்போல மதித்து நீங்கள், பொருளாக விருந்தனமோ நூற்றுவரும் வருகவெதிர் பொருக வென்றான். |
(இ -ள்.) (வீமன் துரியோதனாதியரை நோக்கி),-'அருள் ஆரும் தரும பதி-கருணைநிறைந்த தருமராஜன், ஆகாது என்று எமை பலகால் அடக்க- '(கோபித்தல்) தகாது' என்று சொல்லி எங்களைப் பலமுறை அடக்கியதனால்,- யாமும்-நாங்களும்,-வெம்பரிதி இருளால் வடிவு ஒளிப்பதுபோல்-உஷ்ண கிரணனான சூரியன் இராப்பொழுதில் (தனது) வடிவம் மறைவதுபோல (எமது வலிமை வெளிக்குத் தோன்றாது அடங்கி), அமர்புரியாது இருக்கின்றேம்- (உங்களுடன்) போர் புரிந்து உங்களை யழிக்காமல் வாளா இருக்கின்றோம்; (இவ்வாறன்றி), மருளால் மெய் மயங்கி அறியாமையினால் உண்மையை மாறாக மயங்கி, ஒரு வலி உடையோர் தமைபோல மதித்து-(உங்களை) ஒப்பற்றவீர முடையவராகக் கருதி, நீங்கள் பொருள் ஆக இருந்தனமோ-உங்களை ஒரு பொருளாகக்கொண்டு போர் செய்யாதிருந்தோமோ? நூற்றுவரும் எதிர் வருக பொருக - |