நீங்கள் நூறுபேரும் (இப்போது எனது) எதிரில் வந்து போர் செய்வீர்களாக,' என்றான்-; (எ - று.) இரண்டாமடியில், ஆல் - ஈற்றசை. 'நாங்கள் போர்புரிந்து உங்களை இதுவரையிலும் அழிக்காதிருந்தது, தருமபுத்திரனது கட்டளைக்குக் கட்டுப்பட்டேயல்லாமல் உங்களை வலிமையுடையோரென்று பிரமித்து உங்களை ஒருபொருளாகவெண்ணி அஞ்சி யன்று; இப்பொழுது அவ்விஷயம் தெற்றென விளங்குமாறு நீங்கள் நூற்றுவரும் ஒருங்கு சேர்ந்து என்னொருவன் முன்னே போர்க்கு வாருங்கள்' என வீமன் துரியோதனாதியரை அறைகூவினனென்க. இராப்பொழுதென்ற காரணத்தாற் சூரியன் தான் மறைந்து விடுவதுபோல, எங்கள் தமையனான தருமபுத்திரனது கட்டளையென்ற காரணத்தினால் நாங்கள் எங்களது பராக்கிரமத்தை வெளிக்காட்டாது அடங்கியிருக்கின்றோ மென்பது, இரண்டாமடியின் கருத்து. இயற்கையில் ஆயிரங்கிரணங்களை யுடையனாய்ப் பேரொளியையுடைய சூரியனும் கடவுள் கட்டளைக்குக்கட்டுப்பட்டு இராப்பொழுதில் தான் மறைந்து விடுவதுபோல, இயற்கையிற் பராக்கிரமசாலிகளாய் மகா வீரரான நாங்களும் மூத்தோர் சொற்குக் கீழ்ப்படியவேண்டுமென்ற தரும சாஸ்திரத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்கியிருக்கின்றோ மென்றது, உவமையாற் பெறப்படும். தருமனது கட்டளைக்கு இருளும், சூரியனது ஒளிக்குத் தங்களது பராக்கிரமமும் உவமை. இனி, சூரியன் இயற்கையால் அஸ்தமித்து மறைவது இருளினால் மறைவதாக மேல் நோக்கில் தோன்றுவது போல, நாங்கள் தருமனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருப்பது நுமது வீரத்திற்குப் பின்வாங்கி அடங்கியிருப்பதுபோலத் தோன்றும்; ஆயினும், சூரியன் தனது ஆயிரங்கிரணங்களோடு உதயமாகுங் காலத்தில் மிக்குப் பரவியிருக்கும் இருள் இருந்த இடமுந் தெரியாது அழிந்தொழிவதுபோல, நாங்களும் உக்கிரங்கொண்டு எங்கள் பராக்கிரமத்துடன் போர்க்கு எழுந்தால் பெருவீரர்களென அகங்காரங்கொண்டுள்ள பெருந்திரளான நீங்களும் எங்கள் முன்னிலையில் இருந்த இடமுந் தெரியாது அழிந்தொழிவீர்களெனக் கருத்துக் கூறினுமாம்; இவ்வுரையில் இருளுக்குத் துரியோதனாதியரும், சூரியனுக்குப் பாண்டவர்களும் உவமையாவர்; உவமையணி. மருள்-ஒன்றை மற்றொன்றாக நினைக்கும் விபரீத ஞானம்; திரிபுணர்ச்சி. 'உடையோர் தமைப்போல' - போல - ஒப்பில்போலி. நூற்றுவர் - தொகைக்குறிப்பு; இங்கு, முன்னிலைப்படர்க்கை; உம்மை - முற்றுப் பொருளது. வருக எதிர்பொருக-பிராசம். (405) 253.-திரௌபதியைத் தன்மடிமீதுஇருத்துமாறு துரியோதனன் துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல். கொந்தளக மலர்சொரியக்கூப்பிடுவாள் கொடுங்கற்புங் கூறைமாளா, மந்திரமு மடல்வீமன் மானமிலா துரைக்கின்ற வலியுங் |
|