காணத், தந்தைவிழி யிருள்போலத்தகுமனத்தோ னுந்துச்சாதனனை நோக்கிப், பைந்தொடியைக் கொணர்ந்தினியென் மடியின் மிசையிருத்துகெனப் பணித்திட் டானே. |
(இ -ள்.) தந்தை விழி இருள்போல தகும் மனத்தோனும் - தகப்பனாகிய திருதராட்டிரன் கண்குருடாயிருப்பது போல அஞ்ஞான இருளைக் கொண்ட மனத்தையுடையனாகிய துரியோதனனும்,-துச்சாதனனை நோக்கி-, 'கொந்து அளகம் மலர் சொரிய - தொகுதியான கூந்தல் அவிழ்ந்துகுலைதலினால் (அதில் அணிந்த) மலர்கள் கீழேசிந்த, கூப்பிடுவாள்-கதறியழுபவளாகிய திரௌபதியினது, கொடுங்கற்பும் - மிக உக்கிரமான பதிவிரதா தருமத்தையும், கூறை மாளா மந்திரமும் - (அவளது) ஆடை அவிழ்க்க அவிழ்க்கக் குறைவுபடாமல் மேன்மேல் வளர்கிற இரகசியத்தையும், அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும்-வலிமையையுடைய வீமசேனன் மானமில்லாமற் கூறுகின்ற மிடுக்கையும், காண - (பின்னும்) காணும்படி,-பைந்தொடியைக் கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக - பைம்பொன்னாற் செய்த வளையல்களை யணிந்த திரௌபதியை இழுத்துக்கொண்டு வந்து எனது தொடைமேல் இருக்கச் செய்வாய்,' என பணித்திட்டான் - என்று கட்டளையிட்டான்; (எ - று.) மேன்மேல் தெய்வாநுக்கிரகத்தால் ஆடை வளர்ந்தமையொன்றைக் கொண்டே திரௌபதியினது மேன்மைகளை யெல்லாம் அறிந்து அவள் திறத்தில் யாதொரு தீமையையுஞ் செய்யாதிருக்க வேண்டியதாக, அவ்வாறு இராமல் மேன்மேல் தீங்கையே புரிகின்றா னாதலால், துரியோதனன் தானும் தந்தைபோலவே குருடனாவன்: அவன் ஊனக்கண்குருடன், இவன் ஞானக்கண் குருடன் என்றபடி. திரௌபதியின் கற்புநிலையைப் பின்னும் பரிசோதிக்கக் கருதியும், ஆடையுரிந்த காலத்து அதனை மேன்மேலும் சுரக்கச் செய்ததுபோல இப்பொழுது நான் செய்யும் இதற்கு அத்திரௌபதி என்ன பரிகாரஞ் செய்வாளெனக் காண நினைத்தும், வீரவாதம் பேசும் வீமன் நான் இவ்வாறு செய்தால் என்ன செய்வானெனக் காணவெண்ணியும், துரியோதனன் திரௌபதியைத் தன் தொடைமீது இருத்துமாறு துச்சாதனனுக்குக் கட்டளையிட்டன னென்க. தன் மானத்தைத் தான் காக்குமாறு தெய்வாநுக்கிரகம் பெறுதற்குக் காரணமாயிருத்தலால், திரௌபதியின் கற்பு 'கொடுங்கற்பு' எனப்பட்டது. "குலமகட்குத் தெய்வங் கொழுநனே" ஆதலால், "தெய்வந் தொழாஅள்கொழுநற்றொழு"வது கற்புடை மகட்குக் கடமையாயிருக்க, இவள் அங்ஙனம் தனது துயர் தீர்த்தற் பொருட்டுத் தன் கணவர்களைக் கூப்பிடாது பிறனொருவனை [கோவிந்தனை]க் கூப்பிடுகிறாள்; இது என்ன கற்புடைமை! என்று ஏசுவான், 'கொடுங்கற்பு' என்றானுமாம். அடிமைப்பட்டதனாலும், மனைவிக்கு நேர்ந்த அவமானத்தைத் தீர்க்கமுடியாமல் வாளாவிருந்ததனாலும், அப்பொழுது வீமன் கூறுகின்ற வார்த்தையை |