பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 386

மானமிலா துரைக்கின்றதாகக் கொண்டான். இருத்துகென - தொகுத்தல்.  (406)

254.-திரௌபதிதுரியோதனனுக்குச் சாபமிடுதல்.

என்றபொழு தருந்ததிக்கு மெய்தாதகற்புடையா ளிடியே றுண்ட,
வன்றலைவெம் பணிபோல நடுநடுங்கி மாயனையு மறவாளாகிப்,
புன்றொழிலோன் யானிருக்கக் காட்டியதன் றொடைவழியே
                                     புள்வாய்குத்தச்,
சென்றிடுக வாருயிரென் றெவரும்வெரு வுறச் சபித்தாடெய்வ
                                     மன்னாள்.

     (இ -ள்.) என்ற பொழுது - என்று (துரியோதனன் துச்சாதனனுக்குக்)
கட்டளையிட்ட வளவில்,-அருந்ததிக்கும் எய்தாத கற்பு உடையாள்-
அருந்ததியென்பவட்கும் வாய்க்காத மிக்க கற்புடையவளும்,-தெய்வம்
அன்னாள் - தெய்வத்தை யொத்தவளுமாகிய திரௌபதி, இடிஏறு உண்ட வல்
தலை வெம்பணிபோல நடுநடுங்கி - பேரிடியைக் கேட்கப் பெற்ற வலிய
தலையையுடைய கொடிய சர்ப்பம்போலப் பதைபதைத்து, மாயனையும் மறவாள்
ஆகி - ஸ்ரீ கிருஷ்ண பகவானையும் மனத்திற்கொண்டு தியானிப்பவளாய்,-'புல்
தொழிலோன் - இழிதொழிலுடையவனாகிய துரியோதனன், யான் இருக்க -
நான் இருக்குமாறு, காட்டிய - சுட்டிக்காட்டின, தன் தொடை வழியே - தனது
தொடையின் வழியாகவே, புள்வாய் குத்த - வாயலகினாற் பறவைகள்
குத்துமாறு, ஆர் உயிர் சென்றிடுக - அருமையான உயிர் ஒழிவானாக,' என்று-,
எவரும் வெருவுற சபித்தாள் - கேட்பவர்களெல்லாரும் அஞ்சும்படி
சபித்திட்டாள்; (எ - று.)

     ஐவரைக் கணவராகப் பெற்றும் கற்பு நிலைமைக்குக் குறைவு வாராமற்
சமயத்தில் மானபங்கம் நேராது காத்துக் கொண்ட சிறப்பினை யுடையளாதலால்,
திரௌபதியை 'அருந்ததிக்கு மெய்தாத கற்புடையாள்' என்றார்;
நஹிநிந்தாந்யாயத்தால் [நஹிநிந்தாந்யாயமாவது - ஒரு பொருளைத் தாழ்த்திக்
கூறுமிடத்து அப்பொருளின் தாழ்ச்சியில் தாற்பரியமாகாமல் அவ்விடத்துக்கு
முக்கியமான பொருளின் மேன்மையைக் கூறுதலிலே கருத்துண்டாதல்]
அருந்ததியின் குறைவைக் காட்டாமல், இத்தொடர்மொழி திரௌபதியின்
மேன்மையை மாத்திரம் உணர்த்தும்.  ஆடை வளரப் பெற்ற தெய்விகத்தன்மை
யுடைமையால் 'தெய்வமன்னாள்' என்றார்;  திரௌபதியை இங்கு இவ்வாறு
மேம்படுத்திக் கூறியது இவள் இப்பொழுது துரியோதனனுக்கு இடுஞ் சாபம்
தவறாது பலிக்குமென்றற்கு.  இடியேறு-பேரிடி.  இடியொலியைக் கேட்ட
மாத்திரத்தில் நாகங்கள் அஞ்சி யொடுங்குதல் போல, திரௌபதியும்
துரியோதனனது கர்ணகடூரமான கொடுஞ்சொற்களைக் கேட்டமாத்திரத்தில்
அஞ்சி நடுங்கினளென்க.  கிருஷ்ணானுக்கிரகத்தினாலேயே தன் மானத்தைக்
காத்துக்கொண்டாளாதலின், கிருஷ்ணசகாயமிருந்தால் தனது தொழில் இனிது
முற்றுப்பெறு