பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 387

மெனக் கருதி, சாபமிடும்போதும் கிருஷ்ணனை மறவாது தியானித்தனளென்க.
மாயன்-எவராலும் அறியவொண்ணாத மாயைகளையுடையவன்.  மாயையாவது
- கூடாததையுங் கூட்டுவிக்கும் திறம் [அகடிதகடநாஸாமர்த்தியம்].  பலர்
கூடிய சபையிற் சிறிதும் நாணமின்றிப் பிறர் மனைவியான அபலையினிடத்துத்
தன்வீரத்தைக் காட்டத்தொடங்கினனாதலால் துரியோதனனை, 'புன்
தொழிலோன்' என இகழ்ந்து கூறினார்.  துரியோதனன் தனது துகிலை
யொதுக்கி இடத்தொடையைக்காட்டி அதில் இருக்குமாறு குறிப்பாலுணர்த்த,
திரௌபதி சபித்தனள் என முதனூல் கூறும்.  சென்றிடுக - வியங்கோள்:
வைதற்பொருளின்கண் வந்தது.                                 (407)

255.-திரௌபதியின் சபதம்.

அரசவையி லெனையேற்றி யஞ்சாமற்றுகிறீண்டி யளகந் தீண்டி,
விரைசெயளி யினம்படிதார் வேந்தரெதிர் தகாதனவே விளம்பு
                                          வோரைப்,
பொருசமரின் முடிதுணித்துப் புலானாறு வெங்குருதிபொழிய வெற்றி,
முரசறையும் பொழுதல்லால்விரித்தகுழலினியெடுத்து முடியே
                                           னென்றாள்.

     (இ -ள்.) (பின்னும் திரௌபதி), 'அரசு அவையில் - ராஜசபையிலே,
எனை ஏற்றி - என்னைக் கொண்டுவந்து,-விரை செய் அளி இனம் படிதார்
வேந்தர் எதிர் - நறுமணம் வீசப்பெற்றதும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கப்
பெற்றதுமான மலர்மாலையையணிந்த அரசர்கட்கு எதிரிலே,-அஞ்சாமல்-சிறிதுங்
கூச்சங்கொள்ளாமல், அளகம் தீண்டி-(எனது) தலைமயிரைப் பிடித்திழுத்தும்,
துகில் தீண்டி-(எனது) ஆடையைத் தொட்டு அவிழ்த்தும் (இந்த
அக்கிரமத்தோடு நில்லாமல்), தகாதனவே விளம்புவோரை - சொல்லத் தகாத
கொடுஞ்சொற்களையுங் கூறுகின்றவர்களான துரியோதனாதியரை, பொரு சமரில்
முடிதுணித்து - (இனி) தாக்கிச்செய்யும் போரிலே தலைகளையறுத்து,
புலால்நாறு வெங்குருதி பொழிய-தீ நாற்றம் வீசப்பெற்ற கொடிய இரத்தம்
பெருகிக்கொண்டிருக்க, வெற்றி முரசு அறையும்-ஐயபேரிகையை முழக்குகிற,
பொழுது-அக்காலத்தில், அல்லால்-முடிப்பேனேயல்லாமல், விரித்த குழல் இனி
எடுத்து முடியேன்-அவிழ்க்கப்பட்டு விரிந்துள்ள (எனது) கூந்தலை அதற்கு
முன்பு எடுத்து முடிக்கமாட்டேன்,' என்றாள் - என்று பிரதிஜ்ஞை செய்தாள்;
(எ - று.)

    அளகந்தீண்டுதலும் துகில் தீண்டுதலும்-துச்சாதனனுக்கு மாத்திரமும்,
தகாதனவிளம்புதல் - துரியோதனன் முதலிய பலர்க்கும் உரிய வினையாம்.
துரியோதனாதியர் உயிரொழிந்து அவர்கள் மனைவியர் கூந்தலை
விரிக்கிறவரையில் யான் இவ்வாறே தலைவிரிகோலமாயிருப்பேனென்பது,
திரௌபதியின் சபதமாம்.  செய்யுளாதலின், 'துகில் தீண்டி யளகந் தீண்டி' என
முறைபிறழக்கூறினார்.                                         (408)