256.-இதுவும்,அடுத்தகவியும்-ஒருதொடர்; வீமசேனனது சபதம். பாஞ்சாலிக் கரசவையிற்பழுதுரைத்தோ னுடலெனது படையாமேழி, போஞ்சாலி னிணஞ் சொரியத் துணைவரொடுகுலமாளப்பொருவேன் யானே, தீஞ்சாலி விளைபழனத் திருநாட்டீர்கேண்மினெனச் செந்தீ மூள, வேஞ்சாலி னறுநெய்போல்வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்பு வானே. |
(இ -ள்.) செம் தீ மூள - செந்நிறமான நெருப்பு மூண்டு எரிவதனால், வேம்-கொதிப்படைந்த, சாலின்-கடாரத்திற் காய்கிற, நறுநெய்போல்- நறுமணமுள்ள நெய்போல, வெம் சினத்தான் - வெவ்விய கோபத்தை யுடையவனான வீமசேனன்,-(சபையிலுள்ள அரசர்களை நோக்கி), 'தீம் சாலி விளை பழனம் திருநாட்டீர்-இனிய செந்நெற்பயிர்கள் விளைகின்ற வயல்கள் சூழ்ந்த அழகிய நாடுகளையுடைய அரசர்களே' கேண்மின்-(யான் சொல்வதைக் கேட்பீராக,' என-என்று கூறி, வஞ்சினமும் விளம்புவான்-சபதவார்த்தைகளைக் கேட்பவனானான்; - பாஞ்சாலிக்கு - திரௌபதியின் திறத்தில், அரசவையில்- ராஜ சபையில், பழுது உரைத்தோன்-தீ மொழிகளைக் கூறியவனான துரியோதனனது, உடல்-உடம்பிலே, எனது படை ஆம் மேழி போம் சாலின் - எனது ஆயுதமாகிய கலப்பை பிளந்துசெல்லுகின்ற வழியினின்று, நிணம் சொரிய - கொழுப்புக்கள் வெளிப்படும்படி, துணைவரொடு - (அவனது) தம்பிமாருடனே, குலம் மாள - (திருதராட்டிரனது) வமிசம் அடியோடு அழியுமாறு, யானே பொருவேன் - நானொருவனே போர்செய்வேன்; (எ - று.) துரியோதனாதியர் நூற்றுவரையும் தானொருவனே கொல்வதாக வீமசேனன் சபதஞ்செய்தன னென்க. துரியோதனனது உடம்பாகிய வயலில் தனது கதாயுதமாகிய கலப்பையைக் கொண்டு தொழில் செய்து, அவ்வாயுதத்தாற்புண்பட்ட இடமாகிய உழுபடைச்சாலினின்று நிணமாகிய கலங்கனீரைப் பெருகச் செய்வேனென்றன னென்க. மேழியும் சாலுங் கூறினதற்கு ஏற்ப, மற்றவற்றை உருவகப்படுத்திக் கூறாமையால், இது ஏகதேச உருவகவணியாம். இரண்டாமடியில், சால் - கலப்பை உழுது செல்லும் வழியும், நான்காமடியில் பெருந்தாழியுமாம். யானே, ஏகாரம் - பிரிநிலை. வீமனது கோபத்திற்கு-கொதிக்கும் நெய் உவமை. சினத்தான்-பெயர்; சினத்தையுடையவனாய் என முற்றெச்சமாகக் கொள்ளுதலுமொன்று. சினத்தால் என மூன்றாம் வேற்றுமையாகக் கொண்டால் 'வீமசேனன்' என்ற எழுவாய் வருவிக்க. (409) | 257. | வண்டாருங் குழல்பிடித்துத்துகிலுரிந்தோ னுடற்குருதி வாரி யள்ளி, யுண்டாகங் குளிர்வதன்முன் னிக்கரத்தாற் புனலுண்ணே னொருகா லென்கைத், தண்டால்வெம் புனலெற்றி மீதெழுந்துவிழுந்திவலை தண்ணீ ராகக், கொண்டாவி புரந்திடுவ னிதுவிரதமெனக்கெனவுங் கூறி னானே. |
(இ -ள்.) (அன்றியும்),-வண்டு ஆரும் குழல் பிடித்து - வண்டுகள் மொய்க்கப்பெற்ற (திரௌபதியினது) கூந்தலைப் பிடித் |