திழுத்து வந்து, துகில் உரிந்தோன்-(அவளது) ஆடையையவிழ்த்தவனாகிய துச்சாதனனது, உடல்-உடம்பினின்று பெருகுகிற, குருதிவாரி-இரத்தநீர்ப் பெருக்கை, அள்ளி உண்டு-(கையினால்) அள்ளியெடுத்துக் குடித்து, ஆகம் குளிர்வதன் முன்-(எனது) உடம்பு குளிர்ச்சியடைதற்கு முன்னம் (எனது கோபந் தணிவதற்கு முன்னே என்றபடி), இ கரத்தால் புனல் உண்ணேன் - இந்த (எனது) கைகளால் நீரைப்பருகேன்; ஒருகால்-ஒரு வேளை (தாகம் எடுத்து அவசியமாகநீர்பருக நேர்ந்தபொழுது), என் கை தண்டால் - எனது கையிலேந்தியுள்ள கதாயுதத்தினால், வெம் புனல் எற்றி - விருப்பத்திற்கிடமான நீரை மோதி, (அப்பொழுது), மீது எழுந்து விழும் - மேலெழுந்து தெரித்துவிழுகின்ற, திவலை-நீர்த்துளிகளை, தண் நீர் ஆக கொண்டு- (குடித்தற்கு உரிய) குளிர்ந்த நீராகக் கொண்டு பருகி, ஆவி புரந்திடுவன்- (எனது) உயிரைக் காத்துக் கொள்வேன்; எனக்கு இது விரதம்-எனக்கு இதுவே செய்தொழில்,' எனவும் கூறினான்-என்றும் சபதஞ்செய்தான்; (எ - று.) துரியோதனனைப்போலத் துச்சாதனனும் திரௌபதியின் விஷயத்திற் பெருந்தீங்குகளை நேரே செய்தன னாதலால், அத்துச்சாதனனைக் குறித்தும் வீமன் கடுங்கோபங்கொண்டு தனியே சபதஞ்செய்கின்றான். துச்சாதனனைக்கொன்று அவனுடம்பினிரத்தத்தைக் குடிப்பதற்கு முன்னம் கதையாற்புடைத்து அங்குத்தெறித்த நீரைப் பிராணாதாரமாகப் பருகுவதன்றி, கையால் நீரையெடுத்துப் பருகுவ தில்லையென்று வீமன் சபதஞ் செய்தவாறு. வாரி என்பதை வினையெச்சமாகக்கொண்டு பொருள் கூறினுமாம். (410) 258.-அருச்சுனன் நகுலன்சகதேவன் இவர்களின் சபதம். பகலவன்றன் மதலையுயிர்பகைப்புலத்துக் கவர்வனெனப் பார்த்தன் சொன்னான், நகுலனுமற் றென்கரத்தாற்சௌபலநாயகனுயிர்க்கு நாச மென்றான், சகுனிதனையிமைப்பொழுதிற்சாதேவன் றுணித்திடுவேன் சமரி லென்றான், இகனிருப ரிவர் மொழிகேட் டெளிதோவிக் கொடும்பழியென் றேங்கினாரே. |
(இ -ள்.) பார்த்தன்-அருச்சுனன், 'பகை புலத்து - பகைவர்கள் நெருங்கியுள்ள போர்க்களத்தில், பகலவன்தன் மதலை உயிர் - சூரியனது மகனாகிய கர்ணனது உயிரை, கவர்வன்-கவர்வேன்,' என சொன்னான்-என்று சபதங்கூறினான்; நகுலனும்-, 'என் கரத்தால்-எனது கையினால், சௌபலன் நாயகன் உயிர்க்கு நாசம் - சுபலனது பேரனாகிய [சகுனியின் மகனாகிய] உலூகனென்பவனது உயிர்க்கு நாசமுண்டாகக் கடவது', என்றான்-; சாதேவன்-, 'சமரில்-போர்க்களத்தில், சகுனிதனை இமைப்பொழுதில் துணித்திடுவேன்- சகுனியை ஒருமாத்திரைப்பொழுதில் தலைதுணித்துக்கொல்வேன்', என்றான்-: (அப்பொழுது), இகல் நிருபர் - (சபையிலிருந்த) பராக்கிரமசாலிகளான அரசர்கள், இவர் மொழிகேட்டு-இவர்களது சபத வார்த்தையைக் கேட்டு, 'இ கொடும் பழி |