'அவிதா' என்று கதறியழுத சமயத்தில்,-உடனே - ஒருசேர,- (அதன்பயனாக), மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு - மேகங்கள் (வானத்திற்) சஞ்சரியாமலிருக்கையிலேயே வானம் இடித்தும், ஊர்கோள் வெயிலை சூழ்ந்தும் - பரிவேடம் சூரியனைச் சுற்றித் தோன்றியும் [ஊர்கோள் சூரியனைச்சுற்றி மண்டல மிட்டும்], பூகம்பம் பிறந்து - பூமி நடுங்குதலுண்டாகியும், உடு அரும்பகலே விழுந்தும் - நட்சத்திரங்கள் கடும்பகற் பொழுதிலேயே உதிர்ந்தும், பொய்கை வாடி - குளங்கள் நீர்வற்றியும், யாகம் செய் நெடும் சாலையின் பாலும் செந்நீர் ஆய் - யாகங்களைச் செய்கின்ற பெரிய (யாக) சாலையினது பக்கங்களிலெல்லாம் சிவந்த இரத்தமாயும், (இவ்வாறு உற்பாதங்கள் தோன்றவே), இருந்த வேந்தர் - (அவற்றையெல்லாம்) பார்த்துக்கொண்டிருந்த (சபையிலுள்ள) அரசர்களுடைய, ஆகங்கள் - உடம்புகள், ஒளி மழுங்கிற்று - ஒளி குறையப் பெற்றன; (எ - று.) வானத்தில் மேகங்கள் தோன்றாதிருக்கையிலேயே இடிமுழக்கந் தோன்றுதலும், சூரியமண்டலமிடுதலும், பூகம்பமுண்டாதலும், பகற்பொழுதில் நக்ஷத்திரம் விழுதலும், காரணமின்றிப் பொய்கைநீர் வற்றுதலும், யாகசாலையினிடங்களிலெல்லாம் இரத்தம் நிறைதலும் - உற்பாதங்களாம்; இவ்வாறு ஒன்றன்மேலொன்றாகப் பலவுற்பாதங்கள் ஒருங்கே தோன்றுவதைக் காணவே, சபையிலுள்ள அரசர்கள் மனத்திற் பேரச்சங்கொண்டு உடலொளி குறைந்தன ரென்றவாறு. ஊர்கோள் - சூரியனிடத்திலேனும் சந்திரனிடத்திலேனும் சுற்றி மண்டலமாகத் தோன்றுவது; இது பரிவேஷமெனப்படும். சந்திரனிடத்து உண்டாகும் ஊர்கோள் நன்மையைத் தருவதெனவும், சூரியனிடத்து உண்டாகும் ஊர்கோள் தீமையைத் தெரிவிக்கின்ற உற்பாதமா மெனவும் நூல்கள் கூறும். வெயில் - ஆகுபெயராற் சூரியனை யுணர்த்திற்று. பொய்கை வாடி என்பதற்கு - நீர்நிலைகளிலுள்ள பூங்கொடிகள் மலர்களெல்லாம் வாடியும் என்றும் உரைக்கலாம்; இப்பொருளில், பொய்கையென்பது - அதிலுள்ளவற்றிற்கு இடவாகுபெயர். பாலும் செந்நீர் ஆய் - (ஓமத் திரவியமாகிய) பாலும் இரத்தமாய் என்றுமாம். ஆகங்கள் ஒளிமழுங்கிற்று - ஒருமைப்பன்மை மயக்கம்; ஆகங்களினது ஒளி மழுங்கிற்று எனினும் அமையும். அவிதா - பிராகிருதபாஷையிலுள்ள 'அவிஹ' என்ற இரக்கக் குறிப்பிடைச்சொல், வடமொழிச் சாயையில் 'அவித' என்று திரிந்து வருகின்றது; இச்சொல், காளிதாசமகாகவியினது நாடகங்களிற் பயில்கின்றது. இச்சொல் நீட்டல் விகாரம் பெற்றது; ஐயோ என்னும் முறைப்பாட்டைக் குறிப்பிக்கும். பெருந்தேவனார் பாரதத்தில் "அங்கர் கோன்வாய்தலபிதாவென விட்டான்," "வாயிலபிதாவிட்டமாமறை யோனை" என்றனவும், அதன் வசனத்தில் 'பிராமணனும் கன்னன் தன் கோயில்வாயிற்சென்று 'அபிதாவெனக் கூறி' என்றதுங் காண்க. ஆய்=ஆகி: எச்சத்திரிபு. மேகம், பூகம்பம் உடு, யாகம், ஸாலா - வடசொற்கள். (412) |