260.- திருதராஷ்டிரன்திரௌபதியைப் பொறுக்குமாறு வேண்டுதல். உற்பாதம் பெரிதெனநெஞ் சுகுவாரு மென்னாமிவ் வூரென்றஞ்சி, நிற்பாரும் போம்வழிமே னினைவாரும் பலராகி நிகழ்ந்த காலைக், கற்பான்மிக் குயர்வேள்விக் கடன்சுமந்த மடமயிலைக் கண்ணி லாதோன், பொற்பாதம் பணிந்தேத்தி யபராதம் புரிந்த வெலாம்பொறுத்தி யென்றான். |
(இ - ள்.) பலர் - (அங்குள்ள அரசர்கள்) பலரும், உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் - '(கேடு விளைதலைக் குறிப்பிக்கின்ற) தீநிமித்தங்கள் மிகப்பல' என்று மனமுருகுபவர்களும், இ ஊர் என் ஆம் என்று அஞ்சி நிற்பாரும்-'இனி இந்த அத்தினாபுரம் யாதாய் முடியுமோ?' என்று அச்சங்கொண்டு நிற்பவர்களும், மேல் போம் வழி நினைவாரும் ஆகி - இனி நடக்கக்கூடியதைச் சிந்திப்பவர்களுமாய், நிகழ்ந்த - இருந்த, காலை - சமயத்தில்,-கண்இலாதோன் - கண்ணில்லாத (குருடனாகிய) திருதராட்டிரன், கற்பால் மிக்கு உயர் வேள்வி கடன் சுமந்த மடமயிலை - பதிவிரதா தருமத்தால் மிகச் சிறந்தவளும் இராசசூய யாகத்திற்கு உரிய யாகபத்தினியா யிருந்தவளுமாகிய இளமையான மயில்போன்ற சாயலையுடைய திரௌபதியினது, பொன் பாதம் - அழகிய பாதங்களை, பணிந்து ஏத்தி- வணங்கித் துதித்து, புரிந்த அபராதம் எலாம் பொறுத்தி -'(என் மக்கள் உன்திறத்திற்) செய்த குற்றங்களை யெல்லாம் பொறுத்தருள்வாயாக,' என்றான் - என்று வேண்டினான்; (எ - று.) அரசர்கள் பலரும் பலவுற்பாதங்களைக் கண்டதனால் மனம் நடுங்கி 'இவ்வூர்க்கு என்னகேடு வருமோ' என்று கூறுபவர்களும், 'இனி யாது நிகழும்?' என ஆராய்பவருமா யிருக்கும்பொழுது, விதுரன் மொழியாலும் காந்தாரியின் பேச்சாலும் பலவகையுற் பாதங்கள் நிகழ்ந்த செய்தியை யுணர்ந்த திருதராட்டிரன் திரௌபதியை நல்வார்த்தை சொல்லிச் சினந்தணியுமாறு வேண்டுகின்றனனென, முதனூலை யொட்டிக் கருத்து விரித்துரைக்க. 'மேல் போம் வழி நினைவாரும்' என்றது, இவ்வாறு உற்பாதங்கள் பல தோன்றியதனால், திரௌபதிகாரணமாகப் பாண்டவர்க்கும் துரியோதனா தியர்க்கும் பெரும்போர்நிகழ, அதன்மூலமாக உலகத்துப் பல அரசர்களும் மடியவேண்டி வருமென இங்ஙனமாகக் கருதின ரென்ற பொருளைத் தெரிவிக்கும்; இனி, தாம் இங்கு நேரக்கூடிய ஆபத்துக்கு இலக்காகாமல் தப்பி வெளிச் செல்லுமாறு கருத்துக் கொள்வாரும் என்று பொருளுரைப்பாரு முளர். வேதத்தில் அதிகாரமுள்ள முதல்மூன்று வருணத்தவர்கட்கு ஏற்பட்டிருக்கும் கடன்கள் மூன்றில் யாகமும் ஒன்றாதலால், 'வேள்விக்கடன்' என்றார்; ('வேள்வியால் தேவர் கடனையும், புதல் வரைப்பெறுதலால் பிதிரர் கடனையும், வேதமோதுதலால், இருடியர்கடனையும் கழிக்கின்றான்' என்ற வேதநூற் பொருள் இங்கு அறியத்தக்கது). தருமபுத்திரன் இராசசூய யாகஞ்செய்த போது திரௌபதி தான் யாகபத்தினியாயிருந்து உதவின |