பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 394

262.- சூதில்தோற்றபொருள்களை மீண்டும் பெறுமாறு
பாண்டவர்க்குத் திருதராட்டிரன் அநுமதி தருதல்.

மைவரையுந் தடங்கண்ணாண்மனச்சோகம் பலமுகத்தான் மாற்றி
                                           மைந்தர்,
ஐவரையுந் தனித்தனியே முகங்கொண்டு கொடுங் கோபமகற்றி
                                             நீங்கள்.
மெய்வரையும் பொருபுயத்தீர் வற்போரி லிழந்தவியனிலமுந்
                                            தேருங்,
கைவரையும் பரிமாவுஞ் செல்வமும்யா வையுமீண்டுங் கைக்கொள்
                                            வீரே.

இதுமுதல் மூன்று கவிகள் - ஒருதொடர்.

     (இ -ள்.) (திருதராட்டிரன்),-மை வரையும் தட  கண்ணாள் மனம்
சோகம்-மையெழுதப்பெற்ற பெரிய கண்களையுடையவளான திரௌபதியினது
மனவருத்தத்தை, பல முகத்தால் மாற்றி-பல வகைகளால் தணித்து, மைந்தர்
ஐவரையும்-தம்பியின் குமாரரான  பஞ்சபாண்டவர்களையும், தனி தனியே
முகங்கொண்டு - தனித் தனியே நல்வார்த்தை சொல்லி, கொடுங்கோபம்
அகற்றி-(அவர்கள் கொண்ட) மிக்க கோபத்தைத் தணித்து, (அவர்களை
நோக்கிக் கூறுவான்:)-மெய் வரையும் பொரு புயத்தீர்-உண்மையாக
மலைகளையும் பொருது வெல்லுகின்ற (மலைகளைக்காட்டிலும் திண்ணிய வான)
தோள்களையுடையவர்களே! நீங்கள்-,வல்போரில் இழந்த-சூதுபோரில்
தோற்றிழந்த, வியல் நிலமும்-பெரிய இராச்சியத்தையும், தேரும்- தேர்களையும்,
கை வரையும்-துதிக்கையையுடைய மலைபோன்ற யானைகளையும், பரிமாவும்-
குதிரைகளையும், செல்வமும்-பொருள்களையும், யாவையும்-மற்றுமுள்ள
எல்லாவற்றையும், மீண்டும் கைக்கொள்வீர்-திரும்பவும் (எனது அனுமதியின்
படியே) கைப்பற்றிக் கொள்ளுங்கள்; (எ - று.)

    திரௌபதி வருத்தம் பொறாமல் அழுகின்றதனால்  இட்ட மை கரைந்து
விழுவதுபற்றி, 'மைவரையுந் தடங்கண்ணாள்' என்றாருமாம்; (வரைதல்-
நீக்குதல்.) முகங்கொள்ளுதல்-பராமுகமாயிராதவாறு நல்வார்த்தை சொல்லித்
தன்திறத்தில் இனியமுகத்துடன் இருக்கும்படி செய்து கொள்ளுதல்.
உற்பாதங்கள் தோன்றியதை விதுரன் காந்தாரி இவர்கள் முகத்தால் அறிந்த
திருதராஷ்டிரன் அஞ்சித் திரௌபதியைப் பலவகையாகத் தேற்றி, அவளைத்
தன்னிடத்து வரங்கேட்குமாறு வேண்ட, திரௌபதியும் அதற்கு இணங்கி,
தருமபுத்திரனும் அவனுக்குத் தன்னிடத்துப்பிறந்த மகனான ப்ரதிவிந்த்யனும்
அடிமையும் அடிமைப் புதல்வனுமாகாதவாறு ஒருவரமும், மற்றைப்
பாண்டவர்கள் அடிமையினின்று நீங்குமாறு மற்றொரு வரமும் என
க்ஷத்ரியஸ்திரீ கேட்பதற்கு உரிய இரண்டுவரங்களையுங் கேட்டுக்கொள்ள,
அவ்வாறே கொடுத்த பின்பு, சூதாட்டத்தில் அப்பாண்டவர்கள் இழந்த
இராச்சியம் முதலிய பலவகைச் சிறப்புக்களையும் திருதராஷ்டிரன் அளித்துப்
பாண்டவர்களைச் சமாதானப்படுத்தி விடைகொடுத்து ஊர்க்கு அனுப்பினனென
முதனூல் கூறும்.  மெய் வரையும் என்பதற்கு - சத்தியத்திற்கு
எல்லையாயிருக்கின்ற எனப் பொருள் கூறின்,