யுடைமைபற்றி, இந்தப்பூமிக்கு ஜம்பூத்வீபம் என்று பெயர். அதனை இங்கு 'சம்புநாடு' என்றார். பாண்டவரிடத்து அன்புள்ளவன் போல நடித்தும் அவர்களைச் சிறப்பித்தும் இங்ஙன் சூழ்ச்சி கொண்டு கூறுகின்றானாதலால், திருதராஷ்டிரனை 'விரகினுக்கோர் வீடு போல்வான்' என்றார். வின்மைந்தர் - முன்னிலைப் படர்க்கை; அண்மை விளியில் வந்த இயல்பு எனக்கொண்டு 'மைந்தீர்!' எனப்பொருள் கொள்ளவுமாம். (417) 265.-இதுமுதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: பாண்டவர்கள் தமது இராச்சியத்தைப் பெற்றுச்செல்வதைக் கண்ட சகுனியின் துர்ப்போதனை. படைகொடுத்தா னிவனிழந்தபார்கொடுத்தா னரசாளப் பண்டு போல்வெண், குடைகொடுத்தான் குருகுலத்தே குலங்கொடுத்தானைவருக்குங் குலத்தே கொண்ட, தடைகொடுத்தா னகப்பட்டுந்தலையழிக்க நினையாமற் றானே யம்ம, விடைகொடுத்தானினிவிடுமோ வயப்புலியை வாலுருவி விடுகின் றீரே. |
(இ -ள்.) இவன் - இத்திருதராஷ்டிரன், இழந்த - (தருமபுத்திரன்) சூதாடித் தோற்ற, படை - சேனைகளையெல்லாம், கொடுத்தான் - (அத்தருமபுத்திரனுக்கு மீண்டும்) கொடுத்தான்; பார் கொடுத்தான்- இராச்சியத்தையும் கொடுத்தான்; பண்டுபோல் அரசு ஆள - முன்போலவே இராச்சியத்தை யாளுமாறு, வெள்குடை கொடுத்தான் - வெண்கொற்றக் குடையும் கொடுத்திட்டான்; ஐவருக்கும் - பஞ்ச பாண்டவருக்கும், குருகுலத்தே குலம் கொடுத்தான் - குருகுலத்திற் பிறந்தவரென நற்குடிப்பிறப்பையும் ஒத்துக்கொண்டான்; குலத்தே கொண்ட - குருகுலத்தாரிடத்தில் நேர்ந்த, தடை - (அடிமைத்தன்மையாற்) கீழ்மையுண்டானதை, கொடுத்தான் - போக்கினான்; அகப்பட்டும் - (பாண்டவர்கள் நமது கையிற்) சிக்கியிருக்கவும், தலையழிக்க நினையாமல் - (அவர்களை) அடியோடு கெடுப்பதற்குவேண்டிய ஆலோசனைகளைச் செய்யாமல், தானே - தானாகவே [அவர்கள் கேளாதிருக்கும்பொழுதே வலிவிலே], விடை கொடுத்தான் - விடைகொடுத்து அனுப்பியும் விட்டான்; அம்ம-! வய புலியை வால் உருவி விடுகின்றீரே - வலிமை பொருந்திய புலிகளை வால் தடவி விடுகின்றீர்களே; இனி விடுமோ - இனி (அப்புலிகள் நும்மீது கறுக்கொண்டு உம்மைக் கொல்லாமல்) சும்மாவிடுமோ? (எ - று.) அம்ம - வியப்பிடைச்சொல்; பாண்டவர்கள் நமது கையில் அகப்பட்டதனால் அவர்களை முற்றவும் அழிக்க வேண்டியிருக்க, அவ்வாறு செய்யாமல் அவர்கட்கு வேண்டியவற்றை யெல்லாம் அளித்த அறிவீனத்தைப் பற்றி வியந்தவாறு. ஈற்று ஏகாரம் - இரக்கம். பாண்டவர்கள் சூதாடித்தோற்ற நால்வகைப்பட்ட சேனைகளையும் இராச்சியத்தையும் திருதராஷ்டிரன் கொடுத்ததோடு துரியோதனாதியர்கள் கவர்ந்த அரசசின்னங்களை யெல்லாமும் |