| மீட்டும் பெறுமாறு அவர்கட்கு அளித்தானாதலின், 'பண்டுபோல் வெண்குடை கொடுத்தான்' என்றும், பாண்டவர்கள் யமதருமராஜன் முதலியவர்கட்குப் பிறந்தார்களாகவும் திருதராஷ்டிரன் 'எம்பிமைந்தர்' என்பது போலச் சிலகூறின னாதலால் 'குலங் கொடுத்தான்' என்றும், குருகுலத்து அரசர்களென்றபேர் நீங்குமாறு அடிமைகளாய்விட்ட பாண்டவர்களை அவ் வடிமைத் தன்மையினின்று நீக்கினா னாதலால் 'ஐவருக்குங் குலத்தே கொண்ட தடைகொடுத்தான்' என்றும் சகுனி கூறின னென்க. 'இழந்த' என்ற பெயரெச்சம்-'படை', 'பார்' 'வெண்குடை' என்பவற்றோடு இயையும். 'குடை' என்பது, அரசசின்னங்கட்கெல்லாம் உபலட்சணம். பாண்டவர்களைப் பலவகையாலுந் தாழ்வு படுத்தி மீண்டும் அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கின்றீர்க ளாதலால், இனி அவர்கள் உங்களைத் தவறாது கொல்வரென்ற கருத்தைத் தெரிவித்தலால், 'வயப்புலியை வாலுருவிவிடுகின்றீர்; இனி விடுமோ?' என்ற வாக்கியம் - பிறிதுமொழிதலணியாம். கொடுத்தவன் திருதராஷ்டிரனொருவனே யாதலால் 'கொடுத்தான்' என ஒருமையாகவும், துரியோதனாதியர் அருகிலிருந்தும் அவ்வாறு செய்ய வொட்டாது அவனைத் தடுக்காமலிருந்தது மாத்திரத்தைக் கொண்டு அவ்வாறு அவன் கொடுத்தது உங்கட்கும் உடன்பாடே யாயிருந்த தன்றோ? என்பான் 'விடுகின்றீர்' எனப் பன்மையாகவுங் கூறினான். (418) வேறு. | 266. | யாதொரு கரும மேனு மெண்ணியேதுணிக வென்றும் காதலிற் றுணிந்து செய்தாலெண்ணுதல் கடனன் றென்றும் ஓதுநூற் புலவர் சொன்னாருமக்குள வுணர்வற் றன்றே பேதுற வடர்த்தும் பின்னையுருகிநீர் பிழைசெய் தீரே. |
(இ -ள்.) 'யாது ஒரு கருமம் ஏனும் - (ஒருவர் செய்வது) எந்தக் காரியமாயிருந்தாலும், (செய்வதற்கு முன்பு), எண்ணியே - ஆராய்ந்து பார்த்தே, துணிக-(தம்மனத்திற்கு ஒத்ததாயின் அந்தக்காரியத்தைத்) துணிந்து செய்க, என்றும்-, ('அங்ஙன் ஆராய்ந்து பின் துணிந்து செய்யாமல்), காதலின்-(அந்தக் காரியத்தின்மீதுள்ள) ஆசையினால், துணிந்து செய்தால்-துணிவு கொண்டு (ஒருகாரியத்தைச்) செய்தால், (பிறகு), எண்ணுதல்-(அதைப்பற்றிச்) சிந்தித்தல், கடன் அன்று-முறைமையன்று', என்றும்-, நூல் ஓது புலவர் சொன்னார்- சாஸ்திரங்களைக் கற்றறிந்த பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்; உமக்கு உள உணர்வு - உங்களுக்குள்ள அறிவானது, அற்று அன்றே- அப்படிப்பட்டதன்று [அந்தச் சாஸ்திர முறைமைக்கு ஒத்திருக்கவில்லையே!] நீர் பேது உற அடர்த்தும் - நீங்கள் (பாண்டவர்க்குப்) பெருந்துன்பமுண்டாகுமாறு (அவர்களைச்) சயித்திருந்தும், பின்னை-மறுபடியும், உருகி-மனமிரங்கி, பிழைசெய்தீரே-தவறான காரியத்தைச் செய்து விட்டீர்கள் (எ - று.)- ஈற்று ஏகாரம் - இரக்கம். |