பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 399

     ஒரு காரியத்தைச் செய்துவிட்டபின்பு ஆராய்தற்கு இடமில்லையாதலால்,
ஒவ்வொரு காரியத்தையும் செய்வதற்கு முன்னமே ஆராய்ந்து பார்க்கவேண்டும்;
இவ்வாறிருக்கவும், நீங்கள் மிகவும் வருந்திப் பேராலோசனை செய்து அரிதிற்
சூதுவழி கொண்டு சயித்துப் பின்பு பாண்டவர்களிடத்திற் பேரருள் கொண்டு
சிறிதும் ஆலோசனையின்றி அவர்களை அடிமைத்திறத்தினின்று நீக்கி
அவர்கட்கு அரசாட்சியையும் அளித்துவிட்டீர்களே! முன்னம் உங்களால் மிகவும்
அவமதிக்கப்பட்ட அப்பாண்டவர்கள் நீவிர் செய்த அபகாரங்களையெல்லாம்
மறவாது மனத்திற் கறுக்கொண்டு இனி உங்கட்குப் பெருங்கேடு
புரிவார்களென்பதைக் குறித்து நீங்கள் சிறிதும் ஆலோசனை கொள்ளவில்லையே!
இனி யாது செய்யத் தக்கது? எனச் சகுனி அநுதாபத்தாற் கூறுகின்றனனென்க.
"எண்ணித்துணிக கருமந் துணிந்தபின், எண்ணுவ மென்ப திழுக்கு" என்ற
திருக்குறள் இங்கு உணரத்தக்கது.  'பாண்டவர்களை முன்னமே
அடர்க்காதிருந்திருக்கவேண்டும்; அடர்த்த பின்பு அன்புகொண்டு
உருகாதிருக்கவேண்டும்; அடர்த்துப் பின்பு உருகுதல் எவ்வாற்றாலும் தக்கதன்று'
என்பது - 'பேதுற வடர்த்தும் பின்னை யுருகி நீர் பிழை செய்தீர்' என்பதன்
கருத்து. உமக்கு உள் உணர்வு அற்று அன்றே என்பதற்கு-உமக்குள்ள உணர்வு
கெட்டல்லவோ எனவும் பொருள் கொள்ளலாம்;  முன்னையபொருளில், அற்று
என்பது-'அ' என்னுஞ் சுட்டிடைச்சொற்பகுதியி னடியாப்பிறந்த ஒன்றன்பாற்
குறிப்புவினையாலணையும் பெயர்: இப்பொருளில், 'அறு' என்னும்
வினைப்பகுதியினடியாப் பிறந்த இறந்தகால வினையெச்சம்.

     இது முதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்தொன்பது கவிகள் -
இச்சருக்கத்தின் 2-ஆங் கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்.   (419)

267.தீயினாற் சுட்ட செம்புணாறுமத் தீயிற் றீய
வாயினாற் சுட்ட மாற்றமாறுமோ வடுவே யன்றோ
பேயினாற் புடையுண் டாரோமறப்பரோ பெரியோ ரென்றான்
வீயினாற் றொடுத்த தண்டார்வேந்தர்க்கு வேந்தன் மாமன்.

     (இ -ள்.) 'தீயினால் சுட்ட செம் புண் ஆறும்-நெருப்பினாற்
சுட்டதனாலாகிய செந்நிறமான புண்ணானது ஆறிப்போய் வடுத்தீர்ந்துவிடும்; அ
தீயின் தீய வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ - அத்தீயைக்காட்டிலுங்
கொடிய வாயினாற் சுடுவதுபோன்ற கொடுஞ்சொற்கள் மறைந்துவிடுமோ?
வடுவே அன்றோ - ஒருபொழுதும் மறையாத வடுவாகவே யிருக்குமன்றோ?
பேயினால் புடையுண்டாரோ - (நீங்கள் செய்த தவறுகளையெல்லாம்
மறப்பதற்குப் பாண்டவர்கள்) பேயினால் புடைக்கப்பட்டுத் தம்
வசமிழந்திருப்பவர்களோ? பெரியோர் மறப்பரோ-(நீங்கள் செய்த
பெரும்பிழைகளைப்) பெருமைபெற்ற பாண்டவர்கள் மறந்துவிடுவார்களோ?'
என்றான்-என்று கூறினான்:  (யாவனெனில்,) வீயினால் தொடுத்த தண் தார் -
(நந்தியாவர்த்த) மலர்களால் தொடுக்கப்