பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 4

லோரளியாய் வீமனுக்காருயி ரளித்தாய்" என்னும்படி ஒருநாள் துரியோதனன்
கங்காநதியின் ஸ்நாநகட்டத்தில், இரும்பினாலும் செம்மரத்தினாலும் இயன்ற
கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி உள்நாட்டச்செய்து வீமனை 'நீரில்
விளையாடலாம் வா' என்றுசொல்லி வஞ்சனையாக அழைத்துப்போய்,
'இங்கிருந்து நீ நீரிற் குதிக்கிறாயா, பார்ப்போம்' என்ன, அங்ஙனமே வீமன்
குதித்தற்குச்சித்தனாய் நின்றபொழுது, கண்ணன் கருவண்டினுருவங்கொண்டு
கழுமுனைதோறும் இருக்க, வீமன் அதனை நோக்கி, 'இது என்ன?
நீரோட்டத்தில் வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே' என்று உற்றுப்
பார்க்கும்போது, அங்கெல்லாம் வசிகள் நாட்டியிருக்கக் கண்டு தன்
சந்தேகத்தின்படி அவை நாட்டியிராத இடம் பார்த்துக் குதித்துக் கரையேறி
மீண்டனனென்பது முதலாகப் பற்பல சமயங்களிற் பற்பலவாறு
துரியோதனாதியர்கள் பாண்டவர்களை யழித்தற்குச் செய்த
வஞ்சனைகட்கெல்லாம் மாறாகக் கண்ணபிரான் ஒவ்வோருபாயஞ்செய்து
பாண்டவர்களைப் பாதுகாத்தமை பற்றி, 'பகைத்து மேன்மேல் மூண்டவினை
முழுவதுவும் முனைதோறும் முரண் முருக்கி' என்றார்.  இத்தொடரில்,
அவர்கள் பகைமைகொண்டு மேன்மேற்கோபித்துச் செய்த போர்த்தொழில்கள்
எல்லாவற்றையும் யுத்த களந்தோறும் வலிமையழித்து என்றபொருளும்
தோன்றும்.

     காண்டவ தகனகாலத்தில் இந்திரனேவலாற் பெருமழை பொழிந்து
அத்தீயை யழிக்க வந்த மேகங்களையெல்லாம் அருச்சுனன் அம்புமழை
பொழிந்து துரத்தியோட்டினமையை, கீழ்க் காண்டவ தகனச் சருக்கத்தில்
"கன்மழை பொழியுங் காளமாமுகிலுங் கடவுளர்த் துரந்தவன் கரத்தில்,
வின்மழை பொழியக் கற்களுந் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே"
என்றதனாலுணர்க;   அதனோடு அம்மேகங்கள் பொழிந்த  மழைநீரில் ஒரு
துளியும் தீயின்மேல் விழாதபடி அவன் அம்புகளை அடர்த்தியாகத் தொடுத்துச்
சரகூடங் கட்டித் தடுத்தமையும், 'முகில் புகாமல்' என்ற தொடரில் அமையும்.
தான் சார்ந்த இடத்தை மிக வருத்துதலாலும், அகப்படும் பொருள்களை
யெல்லாம் சீரணிக்கச் செய்யும் ஆற்றலுடைமையாலும், பசி 'வயிற்றுக்கனல்'
எனப்பட்டது;  அருச்சுனன் காண்டவ தகனஞ் செய்வித்தது கண்ணபிரானது
அனுமதிகொண்டே யாதலால், அதனைக் கண்ணன்மே லேற்றிக் கூறினார்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களில் திருமால் தனக்குச்
சிறப்பாகக்கொண்ட தொழில் காத்தலாதலால் 'காக்குமாறே பூண்டருள்'
எனப்பட்டது.  'எம்' என்ற தன்மைப்பன்மை, எல்லாவுயிர்களையும்
உளப்படுத்தியது.  எழு பிறப்பு-மனிதர், தேவர், மிருகம், பறவை, ஊர்வன,
நீர்வாழ்வன, தாவரம் என்பன.  எழுவகைப்பட்ட பிறப்புக்களையும்
மாற்றுவாரென்றது, எம்பெருமானருளாற் கரும மனைத்தும் ஒழிய முத்தி பெறுவ
ரென்றபடி.

     பாண்டவர்- பாண்டு புத்திரர்;  வடமொழித் தத்திதாந்த நாமம்;  கள் -
விகுதிமேல்விகுதி.  தபஸ், பலம் - தவம், பயம்;  பயம் - பயன் என
ஈற்றுப்போலி.