பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 400

பட்ட குளிர்ந்த மாலையையணிந்த, வேந்தர்க்கு வேந்தன் - ராஜராஜனான
துரியோதனனது, மாமன் - மாமனாகிய சகுனி; (எ - று.)

    'நீங்கள் பாண்டவர்கள் திறத்திற் கூறிய தீச்சொல்லோ மிகவும் கொடியது:
ஒருநாளும் மறக்கற்பாலதன்று; இத்தகைய கொடுஞ்சொல்லை மனத்திற்கொள்ளாது
மறக்கவேண்டுமென்றால், தம் வயந்தப்பிய பேயர்க்கன்றி நல்லறிவுடையார்க்கு
இயலாது; பாண்டவர்கள் பெருந்தன்மையராதலால், மனத்திற்கொள்ளாரென்று
நினைத்தற்கும் வழியில்லை; "சிறியோர் பெரும்பிழை செய்தனராயின்,
பெரியோரப்பிழை பொறுத்தலும் அரிதே" யன்றோ! ஆகவே, இப்பொழுது
நீங்களே உங்கட்குக் கேட்டினைத் தேடிக் கொண்டவர்களாய் விட்டீர்களே!' என,
இரக்கந்தோன்றுமாறு சகுனி கூறின னென்க.  "தீயினாற் சுட்டபு ணுள்ளாறு
மாறாதே, நாவினாற் சுட்ட வடு" என்ற திருக்குறள் இங்கு உணரத்தக்கது.
தீயினாற் சுட்ட செம்புண்ணாகிற உபமானத்தினும் வாயினாற் சுட்ட மாற்றமாகிற
உபமேயத்துக்கு ஆறாமல் வடுவாயிருத்தலாகிற சிறப்பைக் கூறியிருத்தலால்,
முன்னிரண்டடி - வேற்றுமையணி. மாற்றம் ஆறுமோ என்றும் பிரிக்கலாம். 
'வீ' என்ற மலர்ப்பொதுபெயர்-இங்கே சிறப்பாய் நஞ்சாவட்டை மலரை
உணர்த்திற்று.                                                 (420)

268.-அதுகேட்ட துரியோதனனதுகட்டளைப்படி துச்சாதனன்
தருமனை நோக்கிக் கூறத்தொடங்குதல்.

சகுனிசொன் மருகன் கேட்டுத்தம்பியு மங்கர் கோவும்
முகமுக நோக்கி யெண்ணியெம்பிநீ மொழிக வென்றான்
துகிலினை யுரிந்த வன்கைச்சூரனுந் தரும ராசன்
மகனுடன் வெகுளி தோன்றவழக்குற மொழித லுற்றான்.

     (இ -ள்.) சகுனி சொல் - (இவ்வாறு சொன்ன) சகுனியின் வார்த்தையை,
மருகன்-(அவனது) மருமகனாகிய துரியோதனன், கேட்டு-, தம்பியும்
அங்கர்கோவும் முகம்முகம் நோக்கி - தம்பியாகிய துச்சாதனனும்
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணனும் என்ற இவர்களது  முகத்தைத்
தனித்தனி உற்றுப்பார்த்து, எண்ணி-ஆலோசித்து, (பின்பு துச்சாதனனை
நோக்கி), 'எம்பி- எனது தம்பியே! நீ -, மொழிக-('சூதில் இழந்த இராச்சியம்
முதலியவற்றைக் காரணமின்றிப் பெற்றுச்செல்வது தகுதியன்று' எனத்
தருமபுத்திரனிடத்துச்) சொல்வாயாக,' என்றான்-என்று கட்டளை யிட்டான்;
துகிலினை உரிந்த வல் கை சூரனும்-(திரௌபதியினது) வஸ்திரத்தை அவிழ்த்த
வலிய கையையுடைய சூரனாகிய துச்சாதனனும், தருமராசன் மகனுடன் -
யமதருமராசனது புதல்வனாகிய யுதிஷ்டிரனிடத்தில், வெகுளி தோன்ற -
(தனக்கு அவன் மீது உள்ள) கோபம் வெளிப்படும்படி [உக்கிரமாக], வழக்கு
உற-வியவகாரம் தோன்றுமாறு, மொழிதல் உற்றான்-சொல்லத்தொடங்கினான்;
(எ - று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

    துச்சாதனன்கை அபலையான திரௌபதியின் ஆடையையுரிந்ததனால்
அதனை 'வன்கை' எனப்பழித்தும், இவ்வாறான