துரியோதனன் துச்சாதனன் என்ற) நான்கு வீரர்களும், எம் அனோர்கள் நவின்றன-எங்களைப்போன்றவர்கள் சொல்வனவற்றை, சிறிதும் கேளார்-; (ஆதலால்), (நீயே), செயல் எண்ணி அறிந்து-செய்ய வேண்டியதை (இன்னதென) ஆராய்ந்தறிந்து, வேதம்நூல் வரும் முறை-வேதங்களிலும் (அவற்றின் வழியாகச் செய்யப்பட்ட) நீதிநூல்களிலுங் கூறியுள்ள முறைப்படியே, சொல்-சொல்வாயாக', என்றான்-; (எ - று.) சகுனி முதலியோர் எங்களுடையசொற்களை மதியாது இகழ்வராதலால், நாங்கள் இப்பொழுது சொல்வதிற் பயனில்லை; ஆகையால், அவர்களது நன்மையையே கருதும் நீயே நூன்முறைமை வழுவாது கூறினாயானால், அவர்கள் மறுக்காது அங்ஙனமே ஒழுகுவர்; ஆகவே, இப்போது நீயே ஆலோசித்துக்கூறுவது தக்கது எனத்துரோணன் மறுமொழி கூறியவாறு. சகுனி முதலிய நால்வரும் பாண்டவரிடத்துப் பெருஞ்சினங்கொண்டு அவர்கட்குத் தீமைபுரிதற் பொருட்டு ஒன்றுசேர்ந்து ஒருதன்மையான அபிப்பிராயத்தை முடிவிற் கொள்வராதலாலும், அதுபற்றியே 'துஷ்டசதுஷ்டர்' என்று பேர் பெறுவராதலாலும், 'வெகுளியான் மிக்கவீரர் நால்வரும்' என்றார்; ஆகவே, 'நால்வர்' என்றது-இங்குத்தொகைக்குறிப்பு. நவின்றன-பெயர். வேதநூல்- (425) 273.- விதுரனும் மற்றைஅமைச்சர்களும் துரோணன் மொழிக்குஇணங்க, திருதராஷ்டிரன் கூறத்தொடங்குதல். வின்மக னுரைக்க வேனையமைச்சரும் விதுரன் றானும் மன்முறை தவறி னின்றேவசையும்வந் திசையு மென்றார் கன்மன நெடுங்குன் றன்னான்கருதியக் கனத்தே மீளத் தன்மனை யாவர்நெஞ்சுஞ்சருகெனத் தழைக்கச் சொன்னான். |
(இ- ள்.) வில் மகன் உரைக்க - வில்வித்தையிற் சிறந்தவனான துரோணன் இவ்வாறு கூற,- (அப்போது), ஏனை அமைச்சரும் - மற்ற மந்திரிகளும், விதுரன் தானும்-விதரனும், (திருதராஷ்டிரனை நோக்கி), 'மன் முறை தவறின்-(நீ ஆராய்ந்து சொல்லுகையில்) அரசமுறைமை தவறிக்கூறுவாயாயின், இன்றே - இப்பொழுதே, வசையும் - பழிப்பும், வந்து இசையும்-வந்துசேரும்,' என்றார்-; மனம் கல் நெடும் குன்று அன்னான் - (தனது) மனம் கல்மயமான நீண்ட மலை போன்று வலிமையா யிருக்கப்பெற்றவனான திருதராஷ்டிரன்,-அ கணத்தே-அந்தக்ஷணத்திலேயே, கருதி-ஆராய்ந்து பார்த்து,- மீள-மறுபடியும், யாவர் நெஞ்சும் சருகு என- எல்லாருடைய மனமும் சருகுபோல வாடவும், தழைக்க-(தன்மனம்) கிளர்ச்சியடையவும், தன்மனை - யுதிஷ்டிரனை நோக்கி, சொன்னான்- சொல்பவனானான்; (எ - று.)- அதனை, அடுத்தகவியிற் காண்க. |