பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 406

இராச்சியமெல்லாம் என்வயத்தனவன்றித் துரியோதனாதியர் வயத்தி
லிருப்பதால் அவர்கள் உடன்பட்டுக் கொடுத்தால்தான் நீங்கள் பெற்றுக்
கொள்ளலாமே யல்லாமல் அவர்கள் மீளக் கொடுத்தற்கு உடன்படாதிருக்கையில்
யான் என்செய்யலா மென்பான், 'வென்று கொண்டனகொடுத்தலொல்லார்'
என்றும், உனது இராச்சியத்தை அன்னியர்கள் கவர்ந்துகொள்ளாது உனது
தம்பியரே ஆள்கின்றன ராதலால் நீ வருந்துதற்கு நிமித்தமில்லை யென்பான்
'உன் பெருந்துணைவர்' என்றும், நீ வனவாசஞ்செய்யென்று நேரே கூறுதற்குப்
பின்வாங்கி மறைபொருளாக 'நின் பெருமைக்கு ஏற்ப முன்னுள்ளோர்
பலருஞ்செய்த முறைமையே முன்னுக' என்றுங் கூறினான்; 'முன்னுள்ளோர் பலர்'
என்றது, இராமன் நளன் அரிச்சந்திரன் முதலியோரை.  'நீ காடு செல்' என்று
கூறவேண்டியிருக்க அவ்வாறு கூறாது 'நின் . . . . .முன்னுக' எனக் கூறியது -
பிறிதினவிற்சியணி. உனக்கே, முறைமையே - ஏகாரங்கள், பிரிநிலை,
முன்னுகென்றான் - தொகுத்தல்.                                (427)

275.- திருதராஷ்டிரனதுகருத்தைத் துரோணன்
தருமனுக்கு விரித்துக் கூறுதல்.

அரசன்மற் றுரைத்த மாற்ற மந்தணனுணர்ந்து செல்வ
முரசதி ரயோத்தி மூதூர் முன்னவன்கதையுங் கூறி
உரைசெய்த படியே யுங்க ளுலகினையிழந்து சின்னாள்
வரைசெறி கானில் வைகி வருவதேவழக்கு மென்றான்.

     (இ -ள்.) அந்தணன் - பிராமணவருணத்தவனாகிய துரோணன்,-அரசன்
உரைத்த மாற்றம் உணர்ந்து - திரதராஷ்டிரமகாராசன் கூறிய வார்த்தையின்
பொருளை யறிந்து, (பின்பு தருமபுத்திரனைநோக்கி), முரசு அதிர் செல்வம்
அயோத்தி முது ஊர் முன்னவன் கதையும் கூறி - முரசவாத்திய
மொலிக்கப்பெற்ற செல்வச் சிறப்புள்ள அயோத்தி யென்கிற பழமையான ஊரில்
திருவவதரித்த முதல்வனான [திருமாலின் அவதாரமாகிய] இராமபிரானது
கதையையும் எடுத்துச்சொல்லி, 'உரை செய்தபடியே.  (உனது பெரிய தந்தை)
கூறிய மொழிப்படியே, சிலநாள் - கொஞ்சகாலம், உங்கள் உலகினை இழந்து -
உங்களது இராச்சியத்தை விட்டிட்டு, வரை செறி கானில் வைகி - மலைகள்
நெருங்கிய காடுகளில் தங்கி வசித்து, வருவதே - மீண்டுந் திரும்பிவருவதே,
வழக்கும் - (இப்பொழுது செய்யவேண்டிய) முறைமையும் ஆகும்', என்றான் -
என்று கூறினான்; (எ - று.)- மற்று - அசை.

    'அயோத்தியில் தசரதகுமாரனாய்த் திருவவதரித்த இராமபிரான் தனது
தந்தையின் சொற்படியே தான் ஆளுதற்குஉரிய இராச்சியத்தைத் தன் பெரிய
தம்பியாகிய பரதனுக்குக்கொடுத்து விட்டு மற்றொரு தம்பியாகிய
இலக்குமணனுடனும் தனது மனைவியாகிய சீதையுடனும் பதினான்கு வருடம்
வனவாசஞ்செய்து மீண்டுவந்து அரசுபுரிந்தனன்' என்ற கதையைத் துரோணன்
கூறி 'நீயும் அவ்வாறே உனது தந்தையின் சொற்படியே உன்