இங்ஙனம் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலன சீலனான எம்பெருமான் விஷயமாக வணக்கம் கூறியதனால், கவி தாம் தொடங்கிய காரியம் இடையூறின்றி இனிதுமுடியு மென்பது கருத்து. இப்பாட்டு மொழிமாற்று முதலியன இன்மையால், யாற்றுநீர்ப்பொருள்கோள். இதுமுதற் பதினேழு கவிகள் - பெரும்பாலும் முதல்நான்கு சீரும் காய்ச்சீர்களும் மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (1) 2. - பாண்டவர்கள்முன்னிலையில் மயன் வந்து ஒன்றுசொல்லத் தொடங்குதல். வியனும்பர் பலகணமுஞ்சுரபதியுஞ் சென்றெழில் கொள்விசும்பின் மேவ, நயனங்கண் முதலான வைம்புலனுமனமும்போனகரி யெய்திப், பயன் மிஞ்சு தொழிலினராய்ப்பாண்டவருந் திருமாலும் பயிலும் வேலை, மயனென்பான்வாய்புதைத்து வளம்படவந்தொருமாற்றம் விளம்பி னானே. |
(இ-ள்.) வியன் உம்பர் பல கணம்உம் - மேலான பலவகைப்பட்ட தேவர்களின் கூட்டமும், சுரபதிஉம் - அத்தேவர்கட்கெல்லாம் அரசனான இந்திரனும், சென்று - (அருச்சுனனோடு போர்செய்தலையொழிந்து) போய், எழில் கொள் விசும்பின் மேவ-அழகு கொண்ட சுவர்க்கலோகத்திற்சேர, - பாண்டவரும் - பஞ்சபாண்டவர்களும், திருமாலும் - ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான கண்ணபிரானும், நகரி எய்தி - இந்திரப்பிரத்த நகரத்தைச் சேர்ந்து, பயன் மிஞ்சு தொழிலினர் ஆய் - நற்பயன் மிக்க செயல்களை யுடையவர்களாய், நயனங்கள் முதல் ஆன ஐம்புலன்உம் மனம் உம் போல் பயிலும் வேலை - கண்கள் முதலிய பஞ்ச இந்திரியங்களும் (இவற்றைப் புலன்களிற் செலுத்துகின்ற) மனமும்போல ஒற்றுமைகொண்டு கூடியிருக்குங் காலத்தில்,-மயன் என்பான் - மயனென்கிற அசுரத்தச்சன், வந்து-(அவர்கள் முன்னிலையில்) வந்து, வாய் புதைத்து - ((கையினால்) வாயை மூடிநின்று, வளம்பட ஒரு மாற்றம் விளம்பினான்-சிறப்பாக ஒரு வார்த்தையைச் சொல்லலானான்; (எ - று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க. 'வியனும்பர் பலகணமுஞ் சுரபதியுஞ் சென்றெழில்கொள் விசும்பின் மேவ' என்றது, கீழ்ச்சருக்கத்தில், "துன்றுதன்சேனைச் சுரகணஞ்சூழச் சுரபதி துறக்கம தடைந்தான்" என்றதன் அநுவாதம்; தொடர்ச்சி தோன்றக் கூறியது. ஐம்பொறிகளையும் உரிய புலன்களிற் செலுத்தி ஒற்றுமைப்பட்டு நிற்கும் மனம்போலப் பஞ்சபாண்டவர்களையும் உரிய தொழில்களிற் பிரவேசிக்கும்படி கண்ணபிரான் பிரேரேபித்து அவர்களைக்கொண்டு தொழில்செய்விக்கின்ற தலைமையும் ஒற்றுமையும் தோன்ற, 'ஐம்புலனும் மனமும்போல் பாண்டவரும் திருமாலும் |