பயிலும்வேலை' என்றார். ஓர் உடலுயிர்க்கே இன்றியமையாதனவான ஆறுகரணங்களையும் இவ்வறுவர்க்கும் உவமை கூறியது, இவ்வறுவரும் ஒருவர்போல் ஒற்றுமைப்பட நின்றன ரென்பதை விளக்கும். எல்லாப் பிராணிகளுள்ளும் அந்தர்யாமியாய் நின்று தொழில் செய்கிற திருமாலுக்கு- அகத்துறுப்பாகிய மனத்தையும், அக்கண்ணபிரான் வழியே யொழுகுகின்றவரும் ஒருவருக்கொருவர் மாறுபடாதவர்களுமான பஞ்சபாண்டவர்களுக்கு- புறத்துறுப்பாகிய பஞ்சேந்திரியங்களையும் உவமைகூறியமை ஏற்கும். 'ஐம்புலனும் மனமும்' என நிறுத்தின முறைமைக்கு ஏற்ப, 'பாண்டவரும் திருமாலும்' என உபமேயங்களை நிறுத்தியது, முறைநிரல் நிறைப் பொருள்கோள். பொறியை 'புலன்' என்றது, உபசார வழக்கு. 'கண்ணிற் சிறந்த உறுப்பில்லை' ஆதலால், அதனைத் தலைமையாகவைத்து 'நயனங்கள் முதலான ஐம்புலன்' என்றார்; என்றது, பஞ்சபாண்டவர்களுள் மூத்தவனும் சிறந்தவனுமான தருமபுத்திரனுக்கு ஐம்பொறிகளுட்சிறந்த கண்ணை உவமை கூறியவாறாம்; அன்றி, மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளுள் மூன்றாவதாய்ச் சிறப்புப் பெறுகிற கண்ணையுதிட்டிரன் வீமசேனன் அருச்சுனன்நகுலன் சகதேவன் என்ற பஞ்சபாண்டவருள் மூன்றாமவனாய்ச் சிறக்கிற அருச்சுனனுக்கு உவமை கூறியதாகவுங் கொள்ளலாம். மயன்-தெய்வத்தச்ச ரிருவரில் ஒருவன்; மற்றொருவன் விசுவகர்மா. மயன் - அசுரசிற்பி யெனப்படுவன். வாய்புதைத்தல் - விநயக்குறி. தான் பெற்ற உயிருதவிக்கு எதிருதவிசெய்து சிறப்புப்பெறுமாறு பாண்டவர்கட்குச் சிறந்ததொரு மண்டபத்தைத் தான் நிருமித்துக்கொடுப்பதாகப் பேசுகின்றனனாதலால், 'வளம்பட ஒருமாற்றம் விளம்பினான்' என்றார். (2) 3. - மயன் சொன்ன வார்த்தை. உம்மாலின் றருவினையே னுயிர்பிழைத்தேனீர்தந்த வுயிர்க்கு மீண்டோர், கைம்மாறு வேறில்லைக் குருகுலம்போ லெக்குலமுங் காக்கு கிற்பீர், தெம்மாற வுலகாளுஞ் செங்கோன்மைக் குருபதிக்குச் சிற்பம் வல்லோ, ரம்மாவென் றதிசயிப்ப வரியமணிமண்டபமொன்றமைக்கின் றேனே. |
(இ -ள்.) குரு குலம்போல் எக்குலம்உம் காக்குகிற்பீர் - (நீங்கள்பிறந்த) குருவென்னும் அரசனது குலத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதுபோலவே மற்று எல்லாக்குலத்தாரது ஒழுக்கத்தையும் பாதுகாத்து நடக்கின்றவர்களே! அருவினையேன் - தீர்த்தற்கு அரிய தீவினையை யுடையேனான நான், இன்று - இன்றையதினத்தில், உம்மால் உயிர் பிழைத்தேன் - உங்கள் கருணையால் இறவாமல் உயிர்கொண்டு உய்ந்தேன்; நீர் தந்த உயிர்க்கு மீண்டு ஓர் கைம்மாறு வேறு இல்லை - நீங்கள் எனக்கு உயிர் தந்தருளியமையாகிய உபகாரத்திற்கு ஈடாகப் பின் நான் செய்யத்தக்கதொரு பிரதியுபகாரம் வேறெதுவுமில்லை; |