பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 7

தெவ் மாற - பகைவர்கள் இலராக, உலகு ஆளும் - பூலோகத்தை
அரசாளுகிற, செங்கோன்மை - நீதிதவறாத அரசாட்சி முறைமையையுடைய,
குருபதிக்கு - குருகுலத்தார்க்குத் தலைவனான யுதிட்டிரராசனுக்காக, சிற்பம்
வல்லோர் அம்மா என்று அதிசயிப்ப - சிற்பசாஸ்திரங்களில் தேர்ந்த தபதிகள்
அம்மா!  என்று சொல்லி ஆச்சரியமடையும்படி, அரிய மணி மண்டபம் ஒன்று
அமைக்கின்றேன் - அருமையான இரத்தினகசிதமாகிய மண்டபமொன்றைச்
செய்துதருகிறேன்; (எ - று.) ஏ - ஈற்றசை; தேற்றமுமாம்.

     கண்ணபிரான் குருகுலத்திற் பிறந்தவர்களான பாண்டவர்கட்குச்
சகாயனாய் நின்று அக்குலத்தின் ஒழுக்கத்தையும் மற்றும் உலகத்தாரது
நல்லொழுக்கங்களையும் ஓம்புதலால், 'குருகுலம் போல் எக்குலமும்
காக்குகிற்பீர்' என்ற விளி கண்ணபிரானுக்கும் ஏற்கும்.  காண்டவவனம்
முழுவதும் தீப்பட்டு எரிகையில் கொடியதீயிலகப்பட்ட மயன் தக்ஷகனது
மாளிகையினின்றும் ஓடி 'அருச்சுனா! அபயம்' என்று அபயம் வேண்டி அரற்ற,
அர்ச்சுனன் அபயங்கொடுக்க, அம்மயனைக் கொல்லும்படி கோபத்தாற்
கண்சிவந்து சக்கராயுதத்தையெடுத்த கிருஷ்ணனும் அருச்சுனன்
அபயங்கொடுத்ததைக் கண்டு தானும் அவன்பக்கல் கருணைசெய்ய,
கிருஷ்ணார்ச்சுனரது நோக்கத்தைக் கண்டு அக்கினியும் மயனைத்
தகித்திலனானமைபற்றி 'உம்மால் இன்று அருவினையேன் உயிர்பிழைத்தேன்'
என்றான்.  அவ்வரலாற்றைக் கீழ்ச்சருக்கத்திற் காண்க.  கிருஷ்ணார்ச்சுனர்
செய்த உதவியை, ஐம்புலனும் மனமும் போலுள்ள ஒற்றுமைநயம்பற்றிப்
பிறர்மேலும் ஏற்றி, 'உம்மால் உயிர்பிழைத்தேன்' என்றும்;  தீயினாற்
பெரியதோர் ஆபத்தை யுற்றன னாதலால், அதனை அடைதற்கு ஏற்ற பிராரப்த
கருமத்தை யுடையே னென்பான், 'அருவினையேன்' என்றும்;  அந்த
ஆபத்காலத்தில் அவர்கள் உயிர்காத்து உதவியதற்குச் சமானமான
அரியபொருள் உலகத்தில் வேறெதுவுமில்லையாதல் பற்றி, 'நீர்தந்த உயிருக்கு
மீண்டோர் கைம்மாறு வேறில்லை' என்றும், அங்ஙனம் செய்யாமற்செய்த
உதவியும் காலத்தினாற் செய்த உதவியும் பயன் தூக்காதுசெய்த
உதவியுமானதற்கு ஏற்றதொரு கைம்மாறு இல்லையாயினும், எனது
செய்ந்நன்றியறிவுகாரணமாக என்னாலியன்றதைக் கடமையாச்செய்வே
னென்பான், 'அரியமணிமண்டபமொன்று அமைக்கின்றேன்' என்றுங் கூறினான்.
உயர்குலத்திற்பிறந்து வீரத்திலும் நீதியிலும் சிறந்த அரசனென்பது 'தெம்மாற
உலகாளுஞ் செங்கோன்மைக் குருபதி' என்ற தொடரினாற்போதரும்.
தருமபுத்திரனுக்கு 'அஜாதசத்ரு' என்று வடமொழியில் ஒருபெயருள்ளதனால்,
அப்பெயரின் பொருளமைய 'தெம்மாறவுலகாளுங் குருபதி' என்றார்;
(அப்பெயரின் பொருள், பகைவர்களுண்டாகப் பெறாதவனென்பது);  யான்
அமைத்துத்தருவது எளிதென்று கருதி வேண்டாவென்று மறாமற்சிறப்பாக
ஏற்றுக்கொள்ளத்தகு மென்பான், 'சிற்பம்வல்லோர் அம்மாவென்று அதிசயிப்ப
அரியமணி மண்டபமொன்று அமைக்கின்றேன்' என்றான்.