பக்கம் எண் :

1

மகா பாரதம்

     இந்தப்பாரதம், அந்தந்தப்பாகத்தின் விஷயத்தைக்குறிக்குஞ்
சொற்களால் ஆதிபருவம், சபாபருவம், ஆரணியபருவம், விராடபருவம்,
உத்தியோகபருவம், பீஷ்மபருவம், துரோணபருவம், கர்ணபருவம்,
சல்லியபருவம், சௌப்திகபருவம், ஸ்திரீபருவம், சாந்திபருவம்,
அநுசாஸநபருவம், அசுவமேதபருவம், ஆசிரமவாசபருவம், மௌசலபருவம்,
மகாபிரஸ்தாநபருவம், ஸ்வர்க்காரோகணபருவம் எனப் பெயர்பெற்ற
பதினெட்டுப் பருவங்களைக் கொண்டது.  (ஆயினும், வில்லிபுத்தூரார்
பாடியன, முதற்பத்துப் பருவங்களே.) அவற்றுள்,

மூன்றாவது

ஆரணிய பருவம்

     இத்தொடர்-வனத்தில்நடந்த செய்தியைப்பற்றிய பருவம் என்று
பொருள்படும்; இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை.
ஆரணியத்தினது விடயமான பருவம் என ஆறாம்வேற்றுமைத்
தொகையுமாம். ஆரணியம் - அரணிய சம்பந்தமானது; தத்திதாந்தநாமம்:
(அரணியம் - காடு.)  பருவம்=பர்வம்: கணு: கரும்பு மூங்கில்
முதலியவற்றிற்கு ஏகதேசமாகிய கணுப்போல நூலுக்கு ஏகதேசமாகிய
உறுப்பைப்  பருவம் என்பது, உவமவாகுபெயர்.  ஆகவே, பாண்டவர்கள்
வனத்தில் வாசஞ் செய்த சரித்திரத்தைச் சொல்லும் பாகமென்பது, கருத்து.
இந்த ஆரணியபருவம், அருச்சுனன்றவநிலைச்சருக்கம்முதல் பழம்
பொருந்துசருக்கம் ஈறாக8 சருக்கங்களையுடையது: அவற்றுள்,

முதலாவது

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்

     அருச்சுனனது தவத்தின்தன்மையைக் கூறுங் கூறுபாடென்பது,
பொருள். அர்ஜ்ஜு நனென்னும்  வடசொல்லுக்கு -
வெண்ணிறமுடையவனென்பது,  பொருள்.  இது, முதலில் இந்நிறமுடைய
கார்த்தவீரியமகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு அவனைப்போன்ற
சௌரிய தைரியங்களையுடையபார்த்தனுக்கு இட்டு வழங்கப்பட்டது: இது,
உவமவாகுபெயரின்பாற்படும்.  பார்த்தன் கருநிறமுடையவனாதலால்,
அவனுக்கு அருச்சுனனென்பது நிறம்பற்றி வந்தபெயரென்றல், பொருந்தாது.
தவம்-தபஸ் என்னும் வடமொழியின் திரிபு: அதாவது - மனம் பஞ்ச