(இ - ள்.) கேட்டு இருந்தருள் - (அவற்றைக்) கேட்டுக்கொண்டிருந் தருளிய, கேசவன் - கண்ணபிரான், வாசவன் காடு இருந்தனன் என்ன - இந்திரன் வனத்தில் வந்திருந்தாற்போல, கவின் பெறும் தோடு இருந்து அளி தேன் நுகர் சோலையின் மாடு இருந்து - அழகுபெற்ற பூவிதழ்களில் தங்கி வண்டுகள் மதுவைக் குடிக்கப்பெற்ற காமியவனத்திலே வந்திருந்து, அ மகீபர்க்கு - அந்த அரசர்களுக்கு, உரைசெய்வான் - சொல்வானானான்; (எ-று.) - அது, மேல் நான்கு கவிகளாற் கூறுகின்றார். கேசவன் என்பதற்கு - பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவ னென்றும், அழகிய தலைமயிர்களையுடையவனென்றும், கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் பொருள்கள் கூறப்படும். வாசவன்=வாஸவன்: அஷ்டவசுக்களுக்குத் தலைவன்; அன்றிக்கே எல்லா ஐசுவரியமுடையவன். காடு-கற்பகச் சோலையுமாம். இருந்த மகீபர்க்கு என்று பிரித்து, வாசவன் காட்டில் வந்திருந்தாற்போலக் கவின் பெறத் தோன்றுகின்றனர் மகீபர் என்று உரைப்பாரு முளர். (13) 14.-இரண்டுகவிகள் - சினந்துகூறிய அரசர்களை ஸ்ரீக்ருஷ்ணன்சமாதானப்படுத்தியது கூறும். விடுகவிந்த வெகுளியைப்பின்புற அடுகநுந்திற லாண்மைகடோன்றவே வடுமனங்கொடு வஞ்சகஞ்செய்பவர் கெடுவரென்பது கேட்டறியீர்கொலோ. |
நான்கு கவிகள் - ஒரு தொடர்: கண்ணன் வார்த்தை. (இ - ள்.) இந்தவெகுளியை - இக்கோபத்தை, விடுக - (இப்பொழுது) விடுவீர்களாக; பின்பு உற - (வனவாச அஜ்ஞாதவாசங்களின்) பின்பாக, நும் திறல் ஆண்மைகள் தோன்ற - உம்முடைய பலபராக்கிரமங்கள் வெளிப்படும்படி, அடுக - (பகைவர்களைக்) கொல்லுவீராக; 'வடுமனம் கொடு - குற்றத்தையுடைய மனத்தையுடையவர்களாய், வஞ்சகம் செய்பவர் - வஞ்சனை செய்பவர்கள், கெடுவர் - கெட்டே விடுவர்,'என்பது - என்னும் வார்த்தையை, கேட்டு அறியீர்கொல்ஓ - (நீவிர்) கேட்டும் அறிந்தீரில்லையோ? மனக்குற்றங்கொண்டு பிறர்க்குத் தீமைசெய்பவர் கெடுவராதலால், இப்போதுசீற்றங்கொண்டு துரியோதனாதியரைச் செறலாகாதென்பதாம். இனி 'கெடுவான் கேடு நினைப்பான்' என்ற பழமொழிக்கு ஏற்ப, துரியோதனாதியர் கேடுநினைத்தலால் தாமேகெடுவார்: அவரைக் கெடுக்கவேணுமென்று இப்போது வெகுளி கொள்ளவேண்டா என்றுமாம். "பிறர்க்கின்னா முற்பகல்செய்யின் தமக்கின்னா, பிற்பகல்தாமேவரும்" என்றார், திருவள்ளுவரும். 'கேட்டு' என்பதன்பின் செய்யுள்விகாரத்தால் தொக்குநின்ற இறந்ததுதழுவிய இழிவுசிறப்பும்மை 'கற்றறியீரோ?' என்னும் பொருளையுணர்த்தும். (14) |