பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்107

துகிர் கொத்துஒளிர் தளிருடன் குலாவு - சிவந்த பவழக்கொத்துப்போல
விளங்குகின்ற துளிர்களுடனே செழித்திருக்கின்ற, கற்பகம் - கற்பக
விருக்ஷமானது,-சித்திரம் விசயம் வில் விசயன் சென்னிமேல் - அழகிய
வெற்றியைத்தருகின்ற வில்லையுடையஅருச்சுனனது முடியின்மேல், முருகு
அவிழ் வாசம் மாலை- தேன் சொரிகிற வாசனையுடையபூமாலையை,
வைத்தது-;(எ-று.)

    நவமணிகளாவன-கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம்,
மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன;முதலிரண்டடி -
கற்பமரத்தின் இயற்கையை வருணித்தது.  கற்பக மரத்தின் கீழ்த்
தங்கியிருக்கையில் அந்தக் கற்பகமரத்தின் மலர் வரிசை அருச்சுனன்
முடிமேல் தொங்குவது, கற்பகமலர் விசயன் சென்னிமேல்
வாசமாலைவைத்ததுபோலுமென இச்செய்யுளுக்குக் கருத்துக் காணலாம்.(145)

146.-இதுமுதல்நான்குகவிகள் - ஒருதொடர்:
தேவேந்திரனும்அருச்சுனனும் சிறப்புற வீற்றிருந்தமை
கூறும்.

கிளரிசைத்தும்புரு கிளருங்கற்பகத்
தளையவிழ்நாண்மலர்சாத்துநாரதன்
அளிபயிலமுதமுண் டகமகிழ்ந்துளக்
களியொடுகின்னரர் கானம்பாடவே.

     (இ - ள்.)கிளர் - விளங்குகின்ற, இசை-சங்கீதத்தையுடைய, தும்புரு -
தும்புருவும் கிளரும் - உயர்ந்து விளங்குகிற, கற்பகம் - கல்பக
விருக்ஷத்தினது, தளைஅவிழ் நாள் மலர் - முறுக்குவிரிந்த புதிய
பூக்களினாலாகியமாலையை,சாத்தும் - தரித்துள்ள, நாரதன் - நாரதனும்,
கின்னரர் - கிந்நரரென்னுஞ் தேவசாதியாரும், அளி பயில் அமுதம் உண்டு
- இனிமைமிகுந்த அமிருதத்தைக்குடித்து, அகம் மகிழ்ந்து - (அதனால்)
மனம் மகிழ்ந்து, உளம் களியொடு - (இயற்கையான) உள்ளக்களிப்புடனே,
கானம் பாட - இசையைப் பாடவும்,-(எ - று.)

     இச்செய்யுளில்'பாட'என்பது,மேல் 149-ஆவது கவியில் 'இருந்தார்'
என்பதனோடுமுடியும்.  அடுத்த இரண்டுகவிகளிலுள்ள 'வாழ்த்த','சூழ'
என்ற செயவெனெச்சங்களுக்கும் முடிபு அதுவேயாம்.  அளி பயில்-
(இனிமை மிகுதியால்) வண்டுகள் மொய்க்கின்ற, அமுதம் எனினுமாம்.
மலர்-மாலைக்குக்கருவியாகுபெயர்.                           (146)

147.சிகையனனிகரகத் தியன்புலத்தியன்
வகைபெறுவசிட்டனேழ்வசுக்களாதியர்
அகமகிழ்ந்துவகைகொளன்பினாற்றிரு
முகமலர்ந்தருமறைமுனிவர்வாழ்த்தவே.

     (இ - ள்.)சிகை அனல் நிகர் அகத்தியன்-சுவாலையையுடைய
அக்கினியையொத்த அகஸ்தியரும், புலத்தியன் - புலஸ்தியரும்,