சிங்கத்தினது முகம்அமைந்துள்ள ஆசனம் விளங்குதலடையும் படி, வீற்றிருந்த காலை-(அவ்வாசனத்தில்)பெருமையாக இருந்தபொழுதில்,-(எ-று.) -இக்கவியில் 'காலை'என்பது, மேற்கவியில் 'காட்டினான்'என்பதோடு முடியும். அருச்சுனனதுவமிசபிதாவாகிய புரூரவசக்கரவர்த்திக்கு மனைவியாயிருந்ததனால்,ஊர்வசி அருச்சுனனுக்குத் தாய்முறையாயினாள் அன்றியும், தந்தையாகிய இந்திரனது வைப்பாட்டியாகையாலும், அருச்சுனனுக்கு ஊர்வசி மாதாவாவ ளென்பர். 'தாள்வணங்கும்' என்றதனால்,அவளது அடியிணைகளில்தனது முடி படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து தெண்டனிட்டன னென்க. அருச்சுனன் அக்கினிபகவானுக்குக் காண்டவ வனத்தை இரையாகக் கொடுத்த காலத்தில், அவனுக்கு அக்கினியினால்,நான்கு வெள்ளைக்குதிரைகள்பூட்டியதொரு தேரும், குரங்குக் கொடியும், காண்டீவமென்னும் வில்லும், அம்புகள் குறைதலில்லாத அக்ஷய தூணீரமும் அளிக்கப்பட்டன என்று அறிக. கைவருதல்-கை பழகுதலுமாம். கடவுளர் - (இவ்வுலக சம்பந்தத்தைக்) கடத்தலையுடையவர். சுதன்மை-ஸு தர்மா என்னும் வடமொழியின் திரிபு; நல்லதருமமுடையது என்று பொருள்:இனி, முதன்மைசேர் சுதன்மையெய்தி என்பதற்கு - சிறப்புப்பெற்ற நற்புத்திரனையுடையனாந்தன்மையை(இந்திரன்) அடைந்து என்று உரைப்பாருமுளர்:சுதன்-மகன். அரிமுகத்தபீடம் - சிங்கந்தாங்குவதுபோல அதன் முகமும் கால்களும் அமைத்துச் சித்திரித்துச் செய்யப்பட்ட ஆதனம். சிங்காதனத்தில் வீற்றிருப்பதனால்இந்திரனுக்கு விளக்கம் உண்டாவது என்ப தன்றிக்கே, இந்திரன் வீற்றிருத்தலினால் ஆதனத்திற்கு விளக்கம் உண்டாவது என, தேவேந்திரனது சிறப்பை உணர்த்தினார்;கம்பராமாயணத்தில் "புனைமணிமண்டபம் பொலிய வெய்தினான்"என்பதனோடுஇதனைஒப்பிடுக. தனக்கு - அருச்சுனனுக்கு; இந்திரனுக்காக என்றும் உரைப்பர். நல்கும், வணங்கும்-இயல்பினால் இறந்தகாலம் எதிர்காலமாக வந்த காலவழுவமைதி;[நன்-பொது-33.]இனி, உம்விகுதி காலமுணர்த்தாமல் தன்மையுணர்த்திற்றெனினும் அமையும். இது முதல்29-கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். இவற்றில் மூன்று ஆறாஞ்சீர்கள்தேமாச்சீர்களாகவே நிற்கும். (177) 2.-நம்பகைவரையொழிக்க வல்லவன் இவனேயென்று இந்திரன்தேவர்கட்கு அருச்சுனனைக்காட்டுதல். தூண்டகுதோளின்மொய்ம்பால் நம்வலிதொலைத்துமென்மேல் மூண்டெழுமவுணர்தம்மை யிவனன்றிமுடிப்பாரியாரென்று ஆண்டகையமரர்க்கெல்லா மவன்செயலடைவேசொல்லிக் காண்டவமெரித்தவீர னிவனெனக்காட்டினானே. |
|