பாதங்களை வணங்கி, (அவனை நோக்கி), 'அரிய வேந்தே - கிடைத்ததற்கு அரிய எம்மரசனே! (இவ்வருச்சுனன்), பூ கொடி-மலரையுடைய கொடிபோன்ற சத்திய பாமைக்காக, தருவோடு - பாரிஜாததருவை வேரோடு, அன்று-முற்காலத்தில், புவியினில் கவர்ந்த வீரற்கு-(இங்கிருந்து) கவர்ந்து பூலோகத்துக் கொண்டுவைத்த வீரனாகிய கண்ணபிரானுக்கு, ஒங்குமைத்துனன்ஏ ஆகில் - சிறந்த மைத்துனானவனானால், இதனில் மற்று உறுதி உண்டுஒ-இதைக்காட்டிலும் விசேஷம் வேறுஉள்ளதோ?இவன் ஈங்கு புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும்-இவ்வருச்சுனன் இங்கேவந்த ஆலோசனைக்குக் காரணமொன்று உள்ளதாயிருக்குமே,' என்றார்-என்று வினாவினார்கள். ஏழாம்வேற்றுமை யிடப்பொருளுணரநின்ற அங்கு இங்கு என்னும் இடைச்சொற்கள், சுட்டுநீண்டு ஆங்கு ஈங்கு என நின்றன. வேந்து - அரசத்தன்மை; அரசனுக்குப் பண்பாகுபெயர்: ஏ-விளியுருபு. பூங்கொடி - பூக்களையுடைய கொடி என விரித்தால், இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க தொகையும் அழகாகிய கொடி என விரித்தல், பண்புத்தொகையுமாம்: இச்சொல்-சத்தியபாமைக்கு உவமவாகுபெயர். பூங்கொடி-காமவல்லியென்ற பூங்கொடியை, தருவோடு-கற்பகத்தருவுடனே எனினுமாம். தரு-வடசொல். உறுதி-நன்மை:அதனைத் தருவதனை உறுதி என்றது காரியவாகுபெயர். அமரர்வேந்தேஎன்றும் பாடம். கண்ணன் நரகாசுரனைச் சங்கரித்தபின்பு, அவனால் முன்னே கவர்ந்து போகப்பட்ட இந்திரன்தாயான அதிதிதேவியினதுகுண்டலங்களை அவளுக்குக் கொடுப்பதற்காகப் பெரிய திருவடியின்மேற் சத்தியபாமையையுட்காருவித்துத் தாமும் உட்கார்ந்துகொண்டு தேவலோகத்திற்குச் செல்ல, அங்க இந்திராணி சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கே யுரிய பாரிஜாதபுஷ்பம் மானிடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள் அதனைக்கண்டு விருப்புற்றவளாய்ச் சுவாமியைப்பார்த்து 'பிராணநாயகனே! இந்தப்பாரிஜாததருவைத் துவாரகைக்குக்கொண்டுபோக வேண்டும்' என்றதைக் கண்ணன் திருச்செவிசார்த்தி, உடனே அந்தவிருட்சத்தை வேரோடுபெயர்த்துப் பெரிய திருவடியின் திருத்தோளின்மேல் வைத்தருளி, இந்திராணி தூண்டிவிட்டதனால் வந்து மறித்துப் போர்செய்த இந்திரனைச் சகலதேவசைனியங்களுடன் சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தி, பின்பு வணங்கின அவனது பிரார்த்தனைப்படியே பாரிஜாதமரத்தைத் திருத்துவாரகைக்குக்கொண்டுவந்து புறங்கடைத்தோட்டத்தில் நாட்டியருளினாரென்பது கதை. (184) 9.-அருச்சுனன் நிகழ்ந்ததுகண்டு எனக்கு இவ்வகைச் சிறப்புத் தகுமோ எனல். தேவர்தம்முரையுந்தேவிசெப்பியவுரையுங்கேட்டுத் தாவரும்புரவித்திண்டேர்த்தனஞ்சயன்றொழுதுசொன்னான் யாவரும்பரவுமுன்றனுடனொராசனத்திருந்து மேவருமுடியுஞ்சூடப்பொறுக்குமோவிமலவென்றே. |
|