யினால், தனது தம்பியான விசித்திரவீரியனது மனைவிமாரிடம் சந்ததியை உண்டாக்கினார். இவ்வடசொல்-வேதங்களை வகுத்தவனென்று பொருள்படும். செவ்வனம் - நேர்மையையுடைய எனினுமாம். இனி, செவ்வன முனைவன் என்பதற்கு-சிவந்த நிறத்தையுடைய முனிவனென்று பொருள்கூறுதல் பொருந்தாது; வியாச பகவானது திருமேனிநிறம் கருமையாதலாலும், அதுபற்றி அவருக்குக் கிருஷ்ணனென்று ஒருபெயர் உண்மையாலு மென்பர். முனைவன் - முன்னையவன்: முன்என்பதை முனையென்பவாகலின், முனைவனென்றவிடத்து முனிவனென்றும் பாடம். வனசரிதர் - வனத்திலே சஞ்சரித்தலை யுடையவர். சேயவன் - செந்நிறமுடைய முருகக்கடவுள்: இச்சொல் - குமாரனென்பதுபோல உவமவாகுபெயரால், மகனைக் காட்டும். (20) 21.-வியாசனைப்பூசித்தபின்னர் தருமபுத்திரன் துரியோதனன் செய்த வஞ்சனையை யெல்லாஞ் சொல்லுதல். கண்டெதிர்சென்றுபோற்றிக் கண்ணினுஞ்சென்னிமீதும் கொண்டனரவன்றன்பாதங் குளிர்ந்தனருயிருமெய்யும் புண்டரநுதலினானைப் பூசனைசெய்தபின்னர் வண்டணிதாரான்செய்த வஞ்சனையனைத்துஞ்சொன்னார். |
(இ- ள்.)(பாண்டவர்கள்),கண்டு - (வியாசபகவானைப்)பார்த்து, எதிர் சென்று - எதிரேபோய், (மரியாதைசெய்துஅழைத்துக்கொண்டு வந்து), போற்றி - துதித்து, அவன்தன் பாதம் - அவனுடைய திருவடிகளை, கண்ணின்உம் சென்னிமீதும் கொண்டனர் - கண்களில் ஒற்றிக்கொண்டும் தலையின்மேல் வைத்துக்கொண்டும், உயிர்உம் மெய்உம் குளிர்ந்தனர் - உயிரும் உடம்பும் குளிரப்பெற்றவர்களாய், புண்டரம் நுதலினானை- புண்டரத்தை யணிந்த நெற்றியையுடைய அந்தவியாசனை, பூசனை செய்த பின்னர் - பூசை செய்த பின்பு, வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்துஉம் சொன்னார் - வண்டுகள் மொய்த்தற்கிடமான நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன் செய்த வஞ்சனை யெல்லாவற்றையுஞ் சொன்னார்கள்;(எ- று.) சென்னிமீது கொண்டனர் என்பதற்கு-தங்கள் சிரசு அவருடைய திருவடிகளிற்படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து தெண்டனிட்டன ரென்பது, கருத்து. 'தொழுதுநெற்றியின்விபூதியாலன்னைதன் றுணையடித்துகணீக்கி' என்று கீழ்ச் சம்பவச்சருக்கத்தில் வந்ததற்குஏற்ப, இங்கு, புண்டரம்என்பது - திரியக்புண்டரமாகிய விபூதியைக் காட்டு மென்பர். குளிர்ச்சி - இங்கே, மகிழ்ச்சி. உயிரும் மெய்யுங் குளிர்ந்தனர் - அஃறிணையெழுவாய் உயர்திணை யெழுவாயின்முற்றைக் கொண்டு முடிந்ததனால், திணைவழுவமைதி: [நன்- பொது. 26]பூசனை-அருக்கியமளித்தல் முதலிய சோட சோபசாரங்களைச் செய்தல். (21) |