(இ-ள்.) துன்றினர்-நெருங்கின பந்துக்கள், இன்னல் எய்த- துன்பமடையும்படி, (சிலர்), துன்னலர் ஆகி - பகைவர்களாய், தம்மில் ஒன்றினர் - தமக்குள் ஒன்றுசேர்ந்து, செறின்உம் - கெடுதி செய்தாலும், உள்ளதுஉண்டு - (அவரவர்களுக்கு முன்னைய ஊழ்வினைப்படி) உள்ளநன்மை அழியாது, என - என்றுசொல்லி, உணர - நன்றாய் அறிந்துகொள்ளும்படி, தேற்றி - சமாதானப்படுத்தி,-கண் உடை கருணை மூர்த்தி - கண்களின் வழியே செல்கின்ற கருணையின் வடிவம்போன்ற அவ்வியாசன், கன்றினர் கவலை தீர்த்தான் - வருத்தப்பட்ட பாண்டவர்களதுகவற்சியை நீக்கினான்; குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டுஓ-மலையின் உயர்வு அம்மலைக்கு அறியும்படி உள்ளதோ?[இல்லை]; (எ-று.) தன்னொடுபயின்றவர்மேற் கண்சென்றவழி அருள் நிகழ்வதாதலின், 'கண்ணுடைக் கருணை' என்றார்; கண்ணோட்டமென்பதனாலுங் காண்க. "கண்ணுடையரென்பவர் கற்றோர்" என்றார், திருவள்ளுவனார்: இனி, ஞானக்கண்ணையுடைய கிருபாமூர்த்தி யென்றுமாம். பாண்டவர்கள் கல்விகேள்விகளையுடையவர்களாயினும் வியாசர்சொல்லியே கவலைதீர்ந்தனர் என்பது, நான்காமடிக்குத் தாற்பரியம்: இது - பிறிதுமொழிதல். (23) 24. | நீவிரேயல்லீர்முன்னா ணிலமுழுதாண்டநேமி நாவிரிகீர்த்தியாள னளனெனுநாமவேந்தன் காவிரியென்னத்தப்பாக் கருணையான்சூதிற்றோற்றுத் தீவிரிகானஞ்சென்ற காதைநுஞ்செவிப்படாதோ. |
(இ-ள்.) நீவிர்ஏ அல்லீர்-(இக்காலத்தில்) நீங்கள் மாத்திரமே (இவ்வாறு சூதில் நாட்டை) இழந்தீரல்லீர்; முன் நாள்-முன்காலத்தில், நிலம் முழுது ஆண்ட-பூலோக முழுவதையும் ஒருங்கே அரசாண்ட, நேமி-ஆஜ்ஞா சக்கரத்தையும், நா விரி கீர்த்தி ஆளன்-(எல்லோருடைய) நாக்குக்களிலும் பரவிய புகழையுமுடையவனும், காவிரி என்ன தப்பா கருணையான்- காவிரிநதிபோல (எப்பொழுதும்) இடைவிடாமற்பெருகுகின்ற குளிர்ந்த அருளையுடையவனுமாகிய, நளன்எனும் நாமம் வேந்தன்-நளனென்னும் பெயரையுடைய சக்கரவர்த்தி, சூதில் தோற்று-(புஷ்கர ராஜனிடஞ்) சூதாட்டத்தில் தோல்வியடைந்து, தீ விரி கானம் சென்ற-தீப்பரவிய காட்டிற்போன, காதை-சரித்திரம், நும் செவி படாது ஓ-உங்கள் காதில் கேட்டதில்லையோ?(எ-று.)-பிரசித்தமென்றபடி. நளன் புட்கரனோடு சூதாடித் தன்மனைவியோடு காட்டிற் சேர்ந்து கலியின் கொடுமையால் மனைவியையும் பிரிந்து கலி நீங்கிய பின் மீண்டும் இழந்த ராச்சியத்தைப் பெற்று இனிதிருந்தானென்பது, நளோபாக்கியான பருவத்திலுள்ளது: இந்தச் சரித்திரம், பாசுபதம்பெற அருச்சுனன் தவம் புரியுமாறு சென்றபின் பிருகதசுவ முனிவராற் கூறப்பட்டதாக வியாசபாரதத்திலுள்ளது. ஆஜ்ஞையைச் சக்கரமென்பது, கவிசமயம். காவேரி-கவேரம் |