72.-பிரமாஸ்திரத்தினால்போர்க்களம் பட்ட நிலை. காற்றாய்மிகமண்டுகடுங்கனலாய்க் கூற்றாயவராவிகுடித்துகுசெஞ் சேற்றாலொருபாதிசிவந்ததுபார் ஏற்றானொருபங்கெனவெங்கணுமே. |
(இ-ள்.)(அப்பிரமாஸ்திரம்),-காற்று ஆய் - (விரைந்து செல்லுதலால்) காற்றையொத்தும், மிக மண்டு கடு கனல் ஆய் - (எரிப்பதனால்) மிகுதியாகப் பற்றியெரிகின்ற கொடிய நெருப்பையொத்தும், கூற்று ஆய்- (கொல்லுதலால்) யமனையொத்தும், அவர் ஆவி குடித்து-அவ்வசுரர்களது உயிரைப் பருகிவர,-உகுசெம் சேற்றால்-(அவர்களுடம்பினின்று)சிந்துகின்ற சிவந்த இரத்தக்குழம்பினால்,பார்-(யுத்த) பூமி, ஏற்றான்ஒரு பங்கு என - ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபிரானது ஒரு பாகம்போல, ஒரு பாதி எங்கண்உம் - ஒரு பாதியிடம் முழுவதும், சிவந்தது-செம்மை நிறமடைந்தது; (எ-று.) ஆய் -உவமவுருபு. குடித்து = குடிக்க: எச்சத்திரிபு. செஞ்சேறு - செந்நீர்ச்சேறு. ஒருபாதி - அசுரர்களுள்ள பாகம் மாத்திரம்; அருச்சுனனுள்ள பாகத்தில் இரத்தம் இல்லையென்க. ஏறு என்னும் ஆண்மைப்பெயர் பசுவிற்கு உரியதாதலை,"எருமையுமரையும்பெற்ற மன்ன"என்னுந் தொல்காப்பியத்தால் அறிக. அர்த்தநாரீசுவரனாகிய சிவனது உருவத்தில் தானாகியவலப்பாகம் சிவந்தும், பார்வதியாகிய இடப்பாகம் கறுத்தும் இருத்தலால், 'ஏற்றானொருபங்கென'என்றார். இனி, ஏற்றானொருபங்கெனஎன்பதற்கு - (மாவலிபக்கல் மூவடி) மண்ணைஇரந்த திருமாலினது வலப்பாகம்போல என்றும் உரைக்கலாம்;"பிறைதங்கு சடையானைவலத்தே வைத்து"எனப் பெரியார் பணித்தார். ஏற்றான்- பிக்ஷாடனஞ்செய்தவனெனச் சிவபிரானுமாம். (248) 73.-பிரமாஸ்திரம் படுத்திய பாடு. நூறாயிரதேரணிநூறியுமேல் ஆறாதசினத்துடனக்கணைபோய் மாறாயவர்மார்பமும்வாண்முகமும் சீறாவெதிர்சென்றுசெறிந்ததுவே. |
(இ-ள்.) அ கணை- அந்தப் பிரமாஸ்திரம்,-நூறுஆயிரம் தேர் அணி - இலட்சம் தேரின்வரிசைகளை,நூறிஉம்-பொடியாக்கியும், மேல் ஆறாதசினத்துடன்-அதன்பின்புந் தணியாத கோபத்துடனே, போய்-சென்று, மாறு ஆயவர்-பகையான அசுரர்களது, மார்பம்உம்-மார்பையும், வாள் முகம்உம்-ஒளியையுடைய முகத்தையும் (நோக்கி), சீறா-கோபித்து,எதிர் சென்று-(அம்மார்பு முகங்களின்) எதிரிற் போய், செறிந்தது-(அவற்றில்) அழுந்திற்று; நூறாயிரதேர்= நூறாயிரந்தேர்: செய்யுளாதலின் விகாரம் பெற்று வந்தது. மாறு - மாற்றார்க்குப்பண்பாகுபெயர். இனி, |