81. | மண்டிமேலெழுந்திங்கெல்லா வுலகையுமடிக்குமாயச் சண்டவாயுவின்பேர்வாளி தானவரவன்மேலேவ அண்டமுந்துளங்கவோங்கு மருவரைப்பகழிவிட்டான் எண்டிசைமுழுதுந்தன்பேரெழுதுபோர்விசயனென்பான். |
(இ - ள்.)இங்கு - இப்போர்க்களத்தி லிருந்துகொண்டே, மேல் எழுந்து - மேலே வீசி, மண்டி-நெருங்கி, எல்லா உலகை உம் - உலகங்களெல்லாவற்றையும், மடிக்கும் - அழிக்கவல்ல, மாயம் - தீங்குசெய்தலையுடைய,சண்டம் - உக்கிரமான, வாயுவின் பேர் வாளி - வாயுவின் பெயரையுடைய பெரிய வாயவியாஸ்திரத்தை, தானவர் - அசுரர்கள், அவன்மேல் ஏவ - அருச்சுனன் மீது பிரயோகிக்க,-எண் திசை முழுதுஉம் - எட்டுத்திக்குக்கள் முழுவதிலும், தன் பேர் எழுது - (கீர்த்தியினால்)தனது பேரை எழுதிய, போர் - போரில்வல்ல, விசயன் என்பான் - அருச்சுனனென்று சிறப்பித்துக் கூறப்படுபவன், -அண்டம்உம் துளங்க ஓங்கும் - உலகவுருண்டையிலுள்ளார் யாவரும் (கண்டு) நடுங்கும் படி உயர்ந்துள்ள, அருவரை பகழி - (அழித்தற்கு) அரிய மலைமயமான சைலாஸ்திரத்தை, விட்டான் - (அவ்வாயவ்யாஸ்திரத்துக்கு எதிராக) விடுத்தான்;(எ - று.) மலைகாற்றைத் தடுத்தலினால்,வாயுவின் அஸ்திரத்திற்குச் சயிலஅஸ்திரம் மாறாகுமென்க. தானவர், தைத்தியர் என்பவற்றிற்குப் பொருள் வேறுபாடு உண்டாயினும், அவ்வேறுபாட்டைக் கருதாமற் பொதுப்படக் கூறுதலும், ஒருகவிசமயமாம். 'என்பான்'எனச் செயப்படுபொருள் வினைமுதல்போலக்கூறப்பட்டது. அண்டருந்துளங்க என்றும் பாடம். (257) 82. | காற்றும்வெங்கனலுங்காரு மிடியுங்கன்மழையுமெங்கும் தோற்றியவிருளுமின்னுந் திசைதொறுஞ்சூழ்ந்துபொங்கக் கூற்றும்வாய்குழறியஞ்சக் கொடியமாமாயவாளி ஆற்றல்சாலரியன்னான்மேலெறிந்தடலவுணரார்த்தார். |
(இ - ள்.)அடல் அவுணர் - வலிமையையுடைய அசுரர்கள்,- காற்றுஉம் - வாயுவும், வெம் கனல்உம் - வெவ்விய அக்கினியும், கார்உம் - மேகமும், இடியும்-, கல்மழைஉம் - சிலாவருஷமும், எங்குஉம் தோற்றிய இருள்உம் - எவ்விடத்துங் காணப்பட்ட அந்தகாரமும், மின்உம் - மின்னலும், திசைதொறுஉம் - எல்லாத்திக்குக்களிலும், சூழ்ந்து பொங்க - சுற்றிலும் நிறையவும்,- கூற்றுஉம் - யமனும், வாய் குழறி அஞ்ச - பயந்து வாய் குளறவும், கொடிய மா மாயம் வாளி - கொடுந்தன்மையையுடைய பெரிய மாயைவடிவமான மோஹாஸ்திரத்தை, ஆற்றல் சால் அரி அன்னான்மேல்- வலிமைமிகுந்த சிங்கத்தை யொத்த அருச்சுனன் மேலே, எறிந்து - பிரயோகித்து,-ஆர்த்தார் - (இனிவெல்லலாமென்னும் உறுதியால்) ஆரவாரஞ்செய்தார்கள்; (எ - று.)-வாய்குழறியஞ்ச - விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. (258) |