பக்கம் எண் :

180பாரதம்ஆரணிய பருவம்

மீண்டுஉம் -மறுபடியும், நெஞ்சினில் அறிவு தூண்ட - மனத்திலே அறிவு
உண்டாகி ஏவியதனால்,நிரை நிரை - வரிசை வரிசையாக, தட தேர் -
பெரிய தேர்களை,தூண்டி-செலுத்திவந்து, செம் சரம் - (பகைவ ருதிரந்
தோய்தலாற்) சிவந்த அம்புகளையும்,சூலம்-சூலங்களையும்,விட்டேறு -
வேல்களையும்,எழு - வளைதடிகளையும்,மழு - மழுக்களையும்,திகிரி -
சக்கரங்களையும்,வாளம் - வாள்களையும்,அஞ்சனம் குன்று அன்னான்
மேல-மைம்மயமான மலையையொத்தஅருச்சுனன்மேலே, எறிந்து - வீசி,
உடன் - ஒருசேர, ஆர்த்த காலை- ஆரவாரித்தபொழுது, (எ-று.)-இதில்
'காலை'என்பது, மேற்கவியில் 'காணொணாது,''காணலாம்'என்பவற்றோடு
முடியும்.

     வாள் -இங்கே, ஆயுதப்பொதுவாய் நின்றது;இது - அவுணர்க்குச்
சாதியடை:இனி, வாள்போலுங் கொடிய அவுணரென்றுமாம்.  வெம்போர்
மறந்து மெய்ம்மயங்கியதற்குக் காரணம் - தாம் அருச்சுனன்மீது
பிரயோகித்த மாயை அவன் பிரயோகித்த அமோஹாஸ்திரத்தால்
அவன்பாற்சென்று பயன்படாமல் தம்பால் மீண்டு வருதலா லாகும்.
விட்டேறு - ஈட்டியென்பாருமுளர்.

87.கடுஞ்சிலைவிரைவும்வீரன்கைத்தொழில்விரைவுமேன்மேல்
விடுங்கணைவிரைவுமெண்ணில்விபுதர்க்குங்காணொணாதால்
கொடுந்தொழிலசுரர்மெய்யிற் குளித்தசெஞ்சரமுமன்னோர்
படும்படுந்துயருமெங்குங் காணலாம்பாருளோர்க்கும்.

     (இ - ள்.) எண்ணில் - ஆலோசிக்குமிடத்து,-வீரன் - அருச்சுனனது,
கடு சிலைவிரைவுஉம் - கொடிய வில்லினது (அம்பெய்யும்) வேகமும், கை
தொழில் விரைவுஉம்-(அம்பை எடுத்தல் தொடுத்தல் விடுத்தல் முதலிய)
கையாற் செய்யுந் தொழிலினது வேகமும், மேல்மேல் விடும் கணை
விரைவுஉம்-ஒன்றன்மேலொன்றாகவிடப்படுகிற அம்புகள் செல்லும்
வேகமும், விபுதர்க்குஉம் - விசேஷ புத்தியையுடைய (மேலுலகத்தில்
வாழ்கிற இமையாக்கண்ணராகிய) தேவர்களுக்கும், காண ஒணாது- பார்க்க
முடியாது;கொடு தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரம்உம்-கொடிய
தொழில்களையுடையஅசுரர்களது உடம்பிலே மூழ்கிய சிவந்த
அம்புகளையும்,அன்னோர்படும் படும் துயர்உம் - அவ்வசுரர்கள்
(அதனால்)மிகுதியாக அனுபவிக்கின்ற துன்பங்களையும்,எங்குஉம் -
எவ்விடத்தும், பார் உளோர்க்குஉம் - நிலவுலகத்திலேயுள்ள (சிற்றறிவினரும்
இமைக்குங்கண்ணரு மாகிய) மனிதர்களுக்கும், காணல் ஆம் - பார்த்தல்
கூடும்;(எ - று.)

     இக்கவியை "மாலுமக்கணம் வாளியைத் தொட்டதுங், கோலவிற்கால்
குனித்ததுங் கண்டிலர், காலனைப்பறித்தக்கடியாள்விட்ட, சூல மற்றன
துண்டங்கள் கண்டனர்" என்னுங் கம்பராமாயணக் கவியோடு ஒப்பிடுக.
எண் இல் எனப்பிரித்து, அளவிறந்த தேவரென்றுமாம்.  படும்படும் -
அடுக்கு, மிகுதிபற்றியது.                                 (263)