பக்கம் எண் :

196பாரதம்ஆரணிய பருவம்

     ஏழுமேகங்களாவன- சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம்,
சங்காரிதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன; இவை முறையே
மணி, நீர், பொன், பூ, மண், கள், தீ இவற்றைப் பொழிவன.  சருவசங்கார
காலத்தில் மேகங்களேழும் ஒருங்கேயெழுந்து அவ்வவற்றிற்கு உரிய
மழையை இடைவிடாது பொழிந்து உலகங்களைஅழிக்கு மென்பதும், கடல்
பொங்கியெழுந்து உலகை மூடு மென்பதும், நூற்கொள்கை.  அயிர்த்து
அயிர்த்து - அடுக்கு, மிகுதிபற்றியது அயிர்த்துயிர்த்து என்றும் பாடம்.

     இதுமுதற்பதினேழுகவிகள் - பெரும்பாலும் ஏழாஞ்சீர் கூவிளச்சீரும்,
மற்றையாறும் மாச்சீர்களுமாகி வந்த எழுசீராசிரிய விருத்தங்கள்.    (290)

115-மூன்றுகவிகள் - காலகேயர் சினந்து போர்க்குப்
பரபரப்புக்கொண்டுவருவதைத் தெரிவிக்கும்.

தெழித்துரப்பியெயிறுதின்று வைதுசெய்யகண்கள்தீ
விழித்துமீசைநுனிமுறுக்கி வெய்யவீரவாளுறை
கழித்தெழுந்துபொங்குகின்ற காளகூடமென்னவே
கொழித்தழன்றுமண்ணும்விண்ணு மின்றுகோறுநாமெனா.

     (இ-ள்.)தெழித்து - கோபங்கொண்டு, உரப்பி - அதட்டி, எயிறுதின்று
- பற்களைக்கடித்து, வைது - வசைமொழிகளைச்சொல்லி, செய்ய கண்கள்
தீ விழித்து - சிவந்த கண்கள் (கோபத்தால்) நெருப்புச்சிந்த
விழித்துப்பார்த்து, மீசை நுனி முறுக்கி-மீசையினுடைய நுனியை (க்கையால்)
திருகி, வெய்ய வீரம் வாள் உறை கழித்து - கொடிய வலிமையையுடைய
வாளைஉறைநீக்கியெடுத்து, எழுந்து-(தத்தமிருப்பிடத்தைவிட்டு) எழுந்து,
பொங்குகின்ற காளகூடம் என்னஏ - (பாற்கடலிற்) கொதித்தெழுந்த
காளகூடமென்னும் பெருவிஷம்போல, கொழித்து - (தீயை) வீசி, அழன்று -
சீறி, 'மண்உம்- நிலவுலகத்தாரையும், விண்உம் - வானுலகத்தாரையும்,
இன்று - இப்பொழுது, நாம்-,கோறும் - கொல்வோம்,'எனா-
என்றுசொல்லி,-(எ-று.)-'ஓடுவாரும்'(116) என மேலே தொடரும்.

     'உரப்பியெயிறுதின்று வைது கண்கடீவிழித்து'என்பது வரையில்
சினத்தின்செயல்.  மீசை முறுக்குதல் முதலியன, வீரத்தின்செயல்.  மீசை -
மிசை [மேலிடத்து]உள்ளது: இது, மேல் உதட்டின் மீதுள்ள மயிரைக்
காட்டும்.  உறை - படைக்கூடு;இது, ஆயுதம் உறுதற்கு இடமாதல்பற்றி
வந்த பெயர்.  உறுதல் - பொருந்துதல், விழித்தல் -உருட்டிப்பார்த்தல்.(291)

116.ஓடுவாருமந்தவோதை யெதிருடன்றுறுக்கியே
நாடுவாருநமர்களாண்மை நன்றுநன்றெனாநகைத்து
ஆடுவாருமமரர்வாழ்வு பாழ்படுத்துமாயுதம்
தேடுவாருமெண்ணிறந்த தேர்களேறுவாருமே.