பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்199

இதுமுதல் நான்குகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.)'கன்னல்வேளைவென்ற - கரும்புவில்லையுடைய
மன்மதனைச்சயித்த, இ கவின் படைத்த காட்சிஉம் - அழகுபெற்ற
இத்தோற்றமும், மின்னு பூண் விளங்கும் மார்புஉம் - பிரகாசிக்கிற
ஆபரணங்கள் விளங்குகிற மார்பும், விபுதருக்குஉம்  இல்லை-
(இவ்வசுரர்களுக்கு இருப்பதுபோலத்) தேவர்களுக்கும் இல்லை;ஆல் -
ஆதலால், இவரை - இவர்களை,ஆவி ஈடு அழிப்பது - உயிரின் வலியை
நாசஞ்செய்வது [கொல்லவேண்டுவது],என்ன பாவம் - (முற்பிறப்பிற்செய்த)
என்ன தீவினையின்பயனோ?'என்று - என்று சொல்லி, போர் மன்னர்
மன்னன் - போரில் வல்ல அரசர்களுக்குட் சிறந்தவனானஅருச்சுனன்,
முன் உரைத்த வாய்மைஉம் - (இவர்களைக்கொல்வேனென்று) முன்னே
சொன்ன சபத வார்த்தையையும், குறிப்புறா-மனத்திற்கருதி,-(எ-று.)-
'குறிப்புறா'என்பது, மேல் 123- ஆம் கவியில் 'செவிக்கொளா'
என்பதனோடுமுடியும்.

     முன் உரைத்தவாய்மை - கீழ் நூற்றுப்பதினோராங்கவியிற் காண்க.
                                                       (296)

121.-அருச்சுனன்மீதுபகழிதூவி அவ்வசுரர்கள்
கூறலுறுதல்.

வில்வளைத்துநின்றநீலவெற்பரொன்றைவிண்ணிடைச்
செல்வளைத்ததென்னவந்துதீயவஞ்சர்யாவரும்
மல்வளைத்தசிகரவாகுகிரியின்மீதுமார்பினும்
கொல்வளைத்தபகழிதூவியின்னநின்றுகூறுவார்.

     (இ-ள்.) வில்வளைத்துநின்ற - வில்லைவணக்கிநின்ற, நீலம்
வெற்பர் ஒன்றை - ஒரு நீலமணிமலையை,விண்ணிடை-ஆகாயத்திலே,
செல் வளைத்ததுஎன்ன - மேகங்கள் சூழ்ந்ததுபோல, தீய வஞ்சர்
யாவர்உம் - கொடிய வஞ்சனையுடையஅசுரர்களனைவரும், வந்து -
வந்து (அருச்சுனனைவளைத்துக்கொண்டு),மல் வளைத்த- மற்போரை
மிகப்பயின்ற, சிகரம் கிரி வாகுவின்மீதுஉம்-சிகரத்தையுடைய மலைகள்
போன்ற (அவனது) தோள்களிலும், மார்பின்உம் - மார்பிலும், கொல்
வளைத்தபகழி தூவி -கொல்லனால்நிருமிக்கப்பட்ட அம்புகளைச்
சொரிந்து, நின்று - நிலைநின்று,இன்ன கூறுவார்-இவ்வார்த்தைகளைச்
சொல்லுவார்கள்;(எ-று.)-அவை மேற்கவியிற் காண்க.

     கொல் -இரும்பைக் காய்ச்சி யடித்துச் செய்யும் வேலை;
கொல்லனுக்கு இங்கு ஆகுபெயர்.  செல் - செல்லுவது: மேகத்துக்குக்
காரணக்குறி.  சிகரவாகுகிரியின் - உருபுபிரித்துக் கூட்டப்பட்டது.  வெற்பர்,
அர் - சாரியை.                                           (297)