பக்கம் எண் :

2பாரதம்ஆரணிய பருவம்

இந்திரியங்களின்வழியிலே போகாமல் நிற்கும்பொருட்டு, வனத்திற்சென்று,
காய், கனி கிழங்குசருகுவருக்கங்களை உண்டும் நீர் பருகியும்
காற்றுநுகர்ந்தும் விரதங்களால் உணவைச்சுருக்குதலும், கோடைக்காலத்தில்
வெயிலிலும் பஞ்சாக்கினிமத்தியிலும் நிற்றலும், மாரிக்காலத்திலும்
பனிக்காலத்திலும் நீர்நிலையிற் பாசியேற நிற்றலும், சுவாசத்தை அடக்குதலும்
முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தன்உயிர்க்குவருந்
துன்பங்களைப் பொறுத்து, இஷ்டதெய்வத்தைத் தியானித்தல்.  நிலை -
நிற்றல்; ஐ விகுதிபெற்ற தொழிற்பெயர்.  சருக்கம் - ஸர்க்கம்: முடிபு
அல்லது படைப்பு என்று பொருள்; அது, சங்கேதத்தால், ஒரு பெரிய
வகுப்பினுட்பட்ட சிறிய பாகத்தைக் குறிக்கும்.

1. -பாண்டவர் பன்னீராயிரம் முனிவரோடு
காமியவனஞ்சேர்தல்.

பெருமித வலியும் பாரும் பேணலார் கவர வின்சொல்
தருமனுந் தம்பி மாருந் தழலெழு தைய லாளும்
அருமக முனிவர் முந்நான் காயிரர் சூழ்ந்து போதக்
கருமுகில் படியுஞ் சாரற் காமிய வனம்புக் காரே.

     (இதன் பொருள்.) இன் சொல் தருமன்உம் - இனிமையான
சொற்களையுடைய தருமபுத்திரனும், தம்பிமார்உம் - (அவனது) தம்பியர்
நால்வரும், தழல் எழு தையலாள்உம் - யாக அக்கினியில் தோன்றின
அழகிய திரௌபதியும்,- பெருமிதம் வலிஉம் - (தங்களது) மிகுந்த
வலிமைக்குக் காரணமான மந்திரி சேனை முதலியவற்றையும், பார்உம் -
இராச்சியத்தையும், பேணலார் - பகைவர்களாகிய துரியோதனாதியர், கவர -
பறித்துக்கொள்ள,-(அதன் பின்பு), முந்நான்கு ஆயிரர் - பன்னீராயிரமென்னுங்
கணக்குடையவராகிய, அரு மகம் முனிவர் - (பிறராற் செய்வதற்கு)
அருமையான யாகங்களைச் செய்துள்ள முனிவர்கள், சூழ்ந்து போத -
(தம்மைச்) சுற்றி வராநிற்க, கரு முகில் படியும் சாரல் - கருமையான
மேகங்கள் தங்குகின்ற மலைப்பக்கங்களையுடைய, காமிய வனம் -
காமியமென்னுங் காட்டை, புக்கார்-அடைந்தார்கள்; (என்றவாறு.)

     பெருமிதம் - மிகுந்த அளவு. பேணலார் - தம்மை விரும்பாதவர்;
எனவே, பகைவராயிற்று: இன்சொல் என்றது - மற்ற நற்குணங்களுக்கும்
உபலக்ஷணம்; உபலக்ஷணமாவது - ஒருமொழி ஒழிந்த தன் இனங்களையுங்
குறிப்பது: (நன்னூல், பொதுவியல், 7.) தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குச்
சிறிதும் பக்ஷபாதமில்லாமல் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை செய்து
தருமத்தைக் காத்தலால் தருமனென்று யமனுக்குப் பெயர்.  தந்தையே
மைந்தனாகப் பிறக்கிறானென்னும் நூல்வழக்குப்பற்றி, தருமபுத்திரனைத்
தருமனென்றார்.  துருபதமகாராஜன், தன்னை அருச்சுனனைக் கொண்டு
வென்று கட்டிக்கொணர்வித்துப் பங்கப்படுத்தின துரோணாசாரியர்மீது
கறுக்கொண்டு அவரைக் கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும்
அருச்சுனனுக்கு மணஞ்செய்துகொடுக்கும்