பக்கம் எண் :

20பாரதம்ஆரணிய பருவம்

28.-வியாசன் 'பகைவர்தீங்குபுரியினும் நும்போலியார்
சஞ்சலமடையார்: அஞ்சலீர்'என்று சொல்லிப்போதல்.

வெஞ்சலமனத்தரானோர் விரகினாற்கூட்டங்கூட்டி
நஞ்சலதுவமையில்லா நவைபுரிந்தனர்களேனுஞ்
சஞ்சலமும்மைப்போலுந் தரணிபருறுதல்செய்யார்
அஞ்சலிரென்றுமீள வாரணமுனியும்போனான்.

    (இ-ள்.) 'வெம் சலம் மனத்தர் ஆனோர்-கொடியமாறுபாட்டைக்கொண்ட
மனத்தையுடையவரானவர்கள், விரகினால் - தந்திரமாக, கூட்டம் கூட்டி -
சபைவைத்து ஆலோசித்து, நஞ்சுஅலது உவமை இல்லா-விஷமல்லாமல் வேறு
உவமையில்லாத (விஷத்துக்குச் சமானமான), நவை-தீங்குகளை, புரிந்தனர்கள்
ஏன்உம் - செய்தார்களாயினும், உம்மை போலும் தரணிபர் - உங்களைப்
போன்ற அரசர்கள், சஞ்சலம் உறுதல் செய்யார் - கவலைப்படமாட்டார்கள்;
(ஆதலால்), அஞ்சலிர் - பயப்படாதீர்கள்,' என்று - என்று
தைரியஞ்சொல்லிவிட்டு, - ஆரணம் முனிஉம் - வேதவியாச முனிவனும், மீள
போனான் - திரும்பிப்புறப்பட்டுப்போனான்;

     பிராணத்தைப்போக்கவல்ல தீங்கு என்பார் 'நஞ்சலதுவமையில்லா
நவை'என்றார்.  சலம்-வடசொல்.  முனியும்போனான் என்ற உவமை, கீழ்
அருச்சுனனும்போனா னென்றதைத் தழுவியதனால், இறந்ததுதழுவியது.
தரணிபர்-பூமியைக் காப்பவர்: வடசொல்.  அஞ்சலிர்-
ஏவற்பன்மையெதிர்மறைவினைமுற்று.   உவமை-உபமா: வடசொல்.    (28)

29.-இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்:
தாபசவேஷத்தோடுஅருச்சுனன் சென்று வடதிசை
யெல்லையைச்சேர்தலைத்தெரிவிக்கும்.

மரவுரியுடையவன்சென்னி வகுத்தசெஞ்சடையன்றூணிச்
சரமுடனங்கியீந்த தனுவினன்றறத்தின்மேலே
புரிதருமனத்தனெல்லாப் புண்ணியங்களுக்குந்தானே
உரைபெறுதசரதன்றன் மகனலாதுவமையில்லான்.

    (இ-ள்.) எல்லாம் புண்ணியங்களுக்குஉம் - நல்வினைகள்
எல்லாவற்றுக்கும், தானே-, உரை பெறு - (இடமாகச்)சொல்லப் பெற்ற,
தசரதன் தன் - தசரதசக்கரவர்த்தியினது, மகன் அலாது - குமாரனாகிய
ஸ்ரீராமபிரானையே யல்லாமல், உவமை இல்லான் - (வேறு) உபமானத்தை
(த் தனக்கு)ப் பெறாத அருச்சுனன்,- மரவுரி உடையன் - மரவுரியாகிய
ஆடையையுடையவனும், சென்னி வகுத்த செம் சடையன் - தலையில்
வகுத்துக்கட்டிய சிவந்த சடையையுடையவனும், தூணி சரமுடன் அங்கி ஈந்த
தனுவினன் - அம்பறாத்தூணியிலுள்ள அம்புகளுடனே அக்கினிபகவானாற்
கொடுக்கப்பட்ட வில்லையுடையவனும், தவத்தின் மேலே புரிதரு மனத்தன் -
தவத்தில் விருப்பங்கொண்ட மனமுடையவனுமாகி, - (எ-று.)- "உத்தர முடிவு
கண்டான்" என முடியும்.