இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.)வஞ்சர் - அசுரர்கள்,-'தனிதம்மேகம் அன்ன - இடியையுடைய மேகத்தையொத்த, தேர்உம் ஒன்று - (எதிரியினது) தேர் ஒன்றுதான்: தா இல் குன்று போல் - அழிதலில்லாத மேருமலைபோல, குனிதரும் - வளைந்த,கடுப்பில் மிக்க - (அம்பெய்யும்) வேகத்தில் மிகுந்த, கொடிய வில்உம் ஒன்று - பயங்கரமான வில் ஒன்றுதான்: (இங்ஙனாகவும்), மேல் கனிவு உறும் - மிக முதிர்தலைப்பெற்ற, சரம் குழாம் - அம்புகளின் கூட்டங்களை,விசும்பின் எல்லை- ஆகாயத்தினிடம் முழுவதும், காட்டும் - பரவுமாறு செய்கிற, ஓர் மனிதன் வின்மை - ஒருமனிதனது விற்றொழிலின் திறம், நன்று நன்று - நன்றாயிருந்ததுநன்றாயிருந்தது,'எனா- என்று, மதித்து - சிறப்பாக எண்ணி,-(எ-று.)-(சொரியாப்பிளிறினர்'என முடியும். தனிதம்=ஸ்தநிதம்: வடமொழி. தனிதமேகமன்னதேர் என்றது - ஆகாயத்தில் விரைந்து செல்லுதலும் பேராரவாரமும் பற்றி. திரிபுர சங்கார காலத்தில் மகாமேருகிரி சிவபிரானுக்கு வில்லாகியிருந்ததனால், 'தாவில்குன்றுபோற்குனிதரும் வில்'என்றார். தா - உரிச்சொல். 'கண்டுபோர்''கட்டுபோர்'என்றும் பாடம். (306) வேறு. 131.-அவுணர்அம்புமழைபொழிந்து கர்ச்சித்தல். புருவவில் வளைவுற விழிகனல் பொதுளக் கருமுகி லனையவர்கடுகினர் முடுகிச் சரமழை யிடிமழை தழன்மழை சொரியாப் பெருமழை யெனநனி பிளிறின ரெவரும். |
(இ-ள்.) கருமுகில் அனையவர்- கறுத்த மேகத்தையொத்தவர்களாகிய, எவர்உம் - எல்லா வசுரர்களும்,-புருவம்வில் வளைவுஉற - (தங்கள் தங்கள்) புருவமாகிய வில் (கோபத்தால் மேல் நெறித்து) வளைதலையடையவும், விழி கனல் பொதுள-கண்களில் நெருப்பு நிறையவும், முடுகி கடுகினர்-மிகவும் வேகமாக வந்து, சரம் மழை - அம்பு மழையையும், இடி மழை - இடிமழையையும், தழல் மழை - நெருப்பு மழையையும், சொரியா-பொழிந்து,-பெருமழை என - பெரிய மேகம்போல, நனி பிளிறினர் - மிகுதியாகக் கர்ச்சித்தார்கள்: (எ-று.)-புருவம்- ப்ரூ என்னும் வட மொழித்திரிபு. இதுமுதற்பதின்மூன்றுகவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று புளிமாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள்;இவற்றில் ஈற்றெழுத்து ஒன்று ஒழிய மற்றையெழுத்துக்கள் பெரும்பாலும் குற்றெழுத்துக்களாகவே வந்தது, குறுஞ்சீர்வண்ணம். இடையிடையே வந்த ஐகாரக் குறுக்கங்களும் மாத்திரை யொப்புமையால் குற்றெழுத்தோடு ஒப்பவே கொள்ளப்படும். (307) |