பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்207

விறலது -வலிமையையுடைய அப்பகைவர்களது உடம்பில் உருவச்சென்று
தொழில்செய்யும் வலிமையையுடையதாகிய, விடையவன் அருளும்-(முன்னே
தனக்குச்) சிவபிரான் அளித்த, கை பகழியை - கையில் வரச்
சித்தமாகவுள்ள அஸ்திரத்தை, மனன் உற-மனம்பொருந்த, நனி கருதா -
மிகுதியாகத் தியானித்து,-(எ-று.)மகிழா என மேலே இயையும்.

     அடல் உடையார்என்பதற்கு - தங்கள் வலிமை யொழியாதவர் என்று
முரைக்கலாம்.  விடையவன் - ருஷபத்தை வாகனமுங்
கொடியுமாகவுடையவன்: அவனருளும் பகழி - பாசுபதம்.  வைப்பகழி
யென்னும் பாடத்துக்கு, கூர்மையுடைய அம்பென்க.  ஒழி தரக் கருதா
என்க.                                                (311)

136.முச்சிரமுடையது மூவிருதிரடோள்
அச்சிரமுடனெதி ரழல்பொழிதறுகண்
நச்சரவனையதுநகமிறுமுனைவாய்
வச்சிரமனையதுவருதலுமகிழா.

     (இ-ள்.)(தியானித்தமாத்திரத்தில்), மு சிரம் உடையது - மூன்று
தலைகளையுடையதும்,மூ இரு திரள் தோள் - திரண்டுள்ள ஆறு
தோள்களையுடைய,அச்சிரமுடன் - உடம்புடனே, எதிர்-காணப்படுகிற,
அழல் பொழி தறுகண் நஞ்சு அரவு அனையது- நெருப்பைச் சொரிகின்ற
அஞ்சாமைதோன்றுகிற கொடுங் கண்களையும்விஷத்தையுமுடைய பாம்பை
யொத்ததும், நகம் இறும்-மலைகள்அறுபடுதற்குக் காரணமான, முனைவாய்
- கூர்மையையுடைய நுனியைக்கொண்ட, வச்சிரம்-வச்சிராயுதத்தை,
அனையது-ஒத்ததுமாகியஅப்பாசுபதாஸ்திரம், வருதலும் - முன்னே வந்த
வளவில், மகிழா - (அருச்சுனன்) மகிழ்ச்சியடைந்து,-(எ-று.)-பரவி விட
என்க.

     நெடுங்காலம்நிலைத்துவாழாமல்விரைவில் அழிதல்பற்றி உடம்பிற்கு
அசிரம் என்று பெயர்: ந+சிரம்=அசிரம்: வடமொழிச்சந்தி;ந -
எதிர்மறையுணர்த்தும்:சிரம் - வெகுகாலம்.  இங்கே, அசிரமென்பது -
எதுகைப்பொருத்தம் நோக்கி 'அச்சிரம்'என விரித்தல் விகாரம்பெற்றது;
இனி, நிலையற்றதென்றபொருளதான அஸ்திரம் என்பதன் திரிபு
எனினுமாம்.  நச்சரவு - தவறாமற்கொல்லுதற்கும், வச்சிரம்-கூர்மை
வலிமைகளுக்கும் உவமை.  வச்சிரம்-இந்திரனாயுதம்.
முற்காலத்தில்மலைகளெல்லாம்பறவைகள் போலச் சிறகுகளுடையனவாகி
அவற்றாற்பறந்துதிரிந்து பலவூர்களின்மீதும் உட்கார்ந்து ஆங்காங்குள்ள
உயிர்களைஅழித்துவர, அதனைஅறிந்த தேவேந்திரன் சினந்து சென்று,
தனது வச்சிராயுதத்தால் அவற்றின் இறகுகளைஅறுத்துத்
தள்ளிவிட்டானென்பது கதை யாதலால், வச்சிரத்துக்கு 'நகமிறுமுனைவாய்'
என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.  நகம் - நடவாதது என
மலைக்குக்காரணக்குறி.  'அச்சுரமுடன்'என்றும் பாடம்.       (312)